தூத்துக்குடியில் செல்போன் கடைகளில் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட செல்போன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடைகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளன.
நேற்று இரவு பள்ளிவாசல் அருகே உள்ள தெற்கு புதுத்தெரு பகுதியில் அமைந்து உள்ள வணிக வளாகத்தில் உள்ள செல்போன் கடை மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடைகளின் முன்பு மர்ம நபர்கள் படுத்து தூங்குவது போன்று நடித்து கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணத்தை திருடி சென்று உள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


