தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர், கருங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி – திருச்செந்தூர் மெயின்ரோட்டின் அருகே கருங்குளத்தில் மதியம் 2 மணி அளவில் வாழைத் தோட்டத்தில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ அருகருகே இருந்த தோட்டத்தில் வேகமாக புகுந்தது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் எரிந்து நாசமானது.
போலீசார் சாலையோரத்தின் அருகே இருந்த மரத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக அருகில் இருந்த அடிபம்பில் தண்ணீர் அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் போலீசார் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் வாழைகள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


