செய்துங்கநல்லூரில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் இருக்கும் பொதுக் கழிப்பறையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கருங்குளம் ஒன்றிய 7-வது மாநாடு செய்துங்கநல்லூரில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்டக் குழு உறுப்பினர் மணி தலைமை தாங்கினார். கணேசன் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் தலைவர் ராகவன் தொடக்க உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் நம்பிராஜன், மாவட்டத் துணைத் தலைவர் கணபதி உள்பட பலர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் புவிராஜ் நிறைவுரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒன்றியச் செயலாளராக மணியும், ஒன்றியத் தலைவராக முருகேசனும், ஒன்றியப் பொருளாளராக ஷேக்கும், துணைத் தலைவர்களாக கணேசன், சந்திரன் ஆகியோரும், துணைச் செயலாளர்களாக அதியலட்சுமி, நடராஜன் ஆகியோரும் உள்பட 15 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
-
செய்துங்கநல்லூரில் நீண்ட காலமாகப் புதிதாகக் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை உடனடியாகத் திறக்க வேண்டும்.
-
தூதுகுழியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
-
சேரகுளம், மீரான்குளம், கால்வாய் ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்குச் சொந்தமாக இருந்த விவசாய நிலங்களின் பட்டாக்கள், அரசு பெயருக்கு மாற்றப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் அந்தந்த விவசாயிகளுக்கே பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


