தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மனை பெற்றுப் பல வருடங்களாகப் பட்டா கிடைக்காமல் தவித்து வரும் 1,055 மனை உரிமையாளர்களுக்கு விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மதன்ராஜாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் வீடுகள் மற்றும் மனைகள் வாங்கிப் பல ஆண்டுகளாகியும், இன்னும் 1,055 பேருக்குப் பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி, மனை உரிமையாளர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் தூத்துக்குடியில் அமைச்சரை நேரில் சந்தி முறையிட்டனர்.
மனை உரிமையாளர்கள் தங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான மதன்ராஜாவை நேரில் சந்தித்துப் விரிவான கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு பத்திர எழுத்தர் சங்க மாநில செய்தித் தொடர்பாளர் சிவசங்கரராமன், அமைச்சர் மதன்ராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மனை உரிமையாளர்களின் நீண்டகாலப் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் மதன்ராஜா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்குத் தங்கு தடையின்றி விரைவில் பட்டா கிடைக்க உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அமைச்சரின் இந்த உறுதியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மனை உரிமையாளர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.


