தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நாட்டுபடகு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரீகன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அதிசயகுமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் கிதர் பிஸ்மி, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பரத நல சங்கத் தலைவர் ரெனால்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஜெரோம் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


