
நமது வீட்டிலே வெந்தைய மைக்ரோகிரின் நுண் தண்டு இலைக் கீரைகள் வளர்ப்பது குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த இயற்கை உணவு ஆர்வலர் கோ.சுரேஷ்குமார் செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்இது தொடர்பாக அவர் கூறியதாவது : முதலில் வெந்தையத்தை 12 மணி நேரம் ஊறவைத்து தொடர்ந்து 36 மணி நேரம் முளைக்கட்ட வேண்டும். முளை கட்டிய விதைகளை 5 செ.மீ ஆழம் கொண்ட தட்டில் அல்லது தண்ணீர் கோப்பையில் 3 செ.மீ (1 பங்கு மண்+1பங்கு இயற்கை உர கலவை) மண் நிரப்பி இதில் முளைக்கட்டிய விதைகளை சமமாக பரப்பி, அவற்றின் மீது மண் சிறிது தூவி விடவேண்டும்.
தண்ணீர் தெளித்து 24-48 மணி நேரம் பிளாஸ்டிக் பை அடைபட்ட சூழலில், அல்லது அறை வெப்ப நிலையில் வைத்தால் நன்றாக முளைக்கும். தொடர்ந்து பிளாஸ்டிக் பையை நீக்கிய பின்பு தினமும் காலை, மாலை இரண்டு முறையும் மிதமான நீர் தெளிக்கவும்.
நேரடி வெயிலில் வைக்காமல், மறைமுக ஒளி கிடைக்கும் அறையில் ஓர் இடத்தில் வைக்கவும். அறுவடை: 7-14 நாட்களில், 2- 4 இலைகள் வளர்ந்தவுடன், பச்சையாக வெட்டி உணவில் பயன்படுத்தலாம். சிறந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இந்த கீரை மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
வெந்தைய கீரையின் முக்கிய பயன்கள்
உடல் நலத்திற்கான சத்து செறிவு – இது புரதம், நார்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் (A, C, K) நிறைந்துள்ளது.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு – வெந்தய மைக்ரோகிரின் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதால், சர்க்கரை நோய் (diabetes) உள்ளவர்களுக்கு பயனளிக்கிறது.
மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடெண்ட் – இது உடலில் உள்ள நச்சுச்சத்துகளை நீக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மார்பக பால் சுரப்பு – பரம்பரியமாக, தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு வெந்தயம் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று கருதப்படுகிறது.
மாரடைப்பு அபாயம் குறைப்பு – இதன் நார்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஜீரண சக்தி அதிகரிப்பு – இது குடல் நலத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தைத் தவிர்க்க உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு சிறப்பு – வெந்தயத்தில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் (phytonutrients) முடி உதிர்வை குறைத்து, வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.
எனவே வீட்டில் மைக்ரோகிரின் வளர்த்து இதனை உணவில் சேர்த்து நம் உடல் நலம் பெறலாம். என தெரிவித்தார்.