ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் கடந்த 1ந்தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஆதிச்சநல்லூரில் 300க்கும் மேற்பட்ட பனைமரங்கள் எரிந்தது. இனிமேல் இந்த மரங்களின் கதி அதோ கதி தான் என நினைத்த நிலையில் தற்போது அந்த பனைமரங்கள் துளிர்விடும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு.
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். இந்த பனைமரம் இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனைமரங்கள் காணப்படுகிறது. இந்த பனைமரங்கள் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் தான் அதிகமாக காணப்படுகிறது. ஒரு காலத்தில் தாமிரபரணி இருகரையிலும கோடிகணக்கில் பனை மரங்கள் இருந்தன. இங்கு ஒவ்வொரு ஊரிலும் பனைத்தொழில் அதிகமாக நடந்தது. பனைத்தொழிலாளிகளும் அதிகமாக வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடத்தில் பனை தொழில் வெகுவாக குறைந்தது. இதில் ஆற்று மணலை அரசே விற்றபோது, இங்கிருந்த பனை மரங்கள் சுமார் 80 சதவீகிதம் அழிக்கப்பட்டு விட்டது. இதில் தப்பி தவறி ஆதிச்சநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.
இந்த பனைமரங்கள் பல்வேறு பகுதிகளில் அழிக்கப்பட்டு வந்தாலும் பனைமரங்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனை மரங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மனதுக்கு ஆறுதலை தந்து வந்தது. இதை தவிர தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக 1 கோடி பனைமர விதைகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடப்பட்டு வருகிறது. ஆனாலும் மரங்களை அழிக்க செயற்கையோடு இயற்கையும் போட்டிப்போடுகிறது. தூத்துக்குடி மாவட்டங்களில் ஜீன், ஜீலை மாதங்களில் அடிக்கும் காற்றில் ஆங்காங்கே வருடம் தோறும் மரங்கள் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் காரணமாக இந்த தீ விபத்துக்கள் அனைத்தும் பெரிய அளவில் மரங்களை பாதித்துள்ளது. குறிப்பாக பனைமரங்கள், தென்னைமரங்கள் மற்றும் வாழை மரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.
கடந்த 1ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் உள்ள கரை மற்றும் உள்பகுதியில் இருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட தென்னைமரங்களும் எரிந்து சேதமானது.
தீ பிடித்த மறுநாள் இந்த விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்ட தீயில் எரிந்த மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர் வருவாய்த்துறையினர். இந்த மரங்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமானது.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் உள்ள எந்த மரங்களையும் பராமரிப்பதில்லை. எரிந்த பனைமரங்களை சுற்றி ஏராளமான காய்ந்த பனை ஓலைகள் கிடந்த காரணத்தினால் தான் இந்த தீ விபத்து மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது. இந்த மரங்களை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வைத்திருந்தால் அதிகமான பனை மரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தாமிரபரணிக்கரையில் உள்ள பனைமரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மரங்களையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையில் இரண்டு வாரத்திற்கும் மேல் ஆன காரணத்தினால் தீயில் எரிந்த பனைமரங்களில் பெரும்பாலான பனைமரங்கள் குருத்தோலை விடத்தொடங்கி உள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, பனை மரங்கள் ஒரு முறை தீயில் எரிந்தால் அதன்பின்னர் அதை வளர்ப்பது மிகவும் கடினம்-. ஆனால் தாமிரபரணிக்கரையில் நீர் படுகையில் இருந்த காரணத்தினால் தற்போது இந்த மரங்கள் அனைத்தும் துளிர்விடத்தொடங்கி உள்ளன. எனவே இந்த எரிந்த மரங்களில் உள்ள ஓலைகள், நுங்குகள் என அனைத்தையும் அகற்றி அனைத்து பனை மரங்களையும் முறையாக பராமரித்து வருடம் தோறும் இந்த பனைமரங்களில் உள்ள காய்ந்த ஓலைகளை அகற்றினாலே காற்றுக்காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்க்க முடியும். எனவே பொதுப்பணித்துறையினர் இந்த வேலைகளை முறையாக செய்ய வேண்டும்.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏராளமான பனைமரங்கள் உள்ளது. இந்த பனைமரங்களில் வருடம் தோறும் ஏற்படும் தீ விபத்துக்களில் பனைமரங்கள் எரிந்து சேதமாகும் நிலை தொடர்ந்து வருகிறது. எனவே தாமிரபரணி கரையில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த மரங்களை பராமரிப்பது இல்லை. எனவே வருடம்தோறும் இந்த பனைமரங்களை பராமரித்து வைத்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாது. எனவே இந்த மரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறையினரின் பொறுப்பற்ற பதில்
தாமிரபரணியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறையினரிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் அவர்கள் பொறுப்பற்ற பதிலே கூறி வருகிறார்கள்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த ஜுன் மாதம் 13 ந்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் தெட்சண காசி என்று அழைக்கப்படும் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இங்கு அமாவாசை உள்பட முக்கிய நாள்களில் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்நானம் செய்கிறார்கள். வெளியூரில் இருந்து அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அமலைசெடி அடர்ந்து இருப்பதாலும், அதில் விஷசந்துகள் குடியிருந்து வருவதாலும் பக்தர்களை அச்சுருத்துவதாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குளிக்கும் இடத்தில் அமலைசெடி அடர்ந்து இருப்பதால் தூர் நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு மூன்று பைப் லைன் மூலமாக தண்ணீர் செல்கிறது. விருதுநகர் காரியாப்பட்டி, கருங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட சுமார் 42 கிராமங்களுக்கும் இங்கிருந்து குடிதண்ணீர் செல்கிறது. எனவே அந்த தண்ணீரும் தூர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்படும். எனவே அமலைச் செடிகளை அகற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் இந்த மனுவை பொதுப்பணித்துறை உதவிச்செயற் பொறியயாளர் ஆதிமூலத்துக்கு விளக்கம் கேட்டு அனுப்பியிருந்தார்.
அந்த மனுவிற்கு பதிலளித்த உதவிச்செயற் பொறியாளர் ஆதிமூலம் முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச்செடிகளை தொண்டு நிறுவனங்கள் மூலமாக அகற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார்.
பொதுப்பணித்துறையினர் அறிவித்தப்படி இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று ஆடி அமாவாசை. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் பொதுப்பணித்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோலவே பனையையும் பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களோ என சமூக ஆர்வலர்களிடம் பயம் ஏற்பட்டுள்ளது.


