தூத்துக்குடி மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விடுபட்ட நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாய நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முள்ளக்காடு, அத்திமரப்பட்டி மற்றும் குலையன்கரிசல் விவசாயிகள் நல அமைப்பின் சார்பில் கிருஷ்ணகோபால், தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரபுவிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பயிர் சேதம்: கடந்த 2024 டிசம்பர் மாதம் பெய்த இருநாள் தொடர் மழையினால், விளைநிலங்களில் உபரி நீர் தேங்கி நெல் மற்றும் வாழைப் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான திருமதி பி. கீதா ஜீவன் அவர்களும், மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத் அவர்களும் நேரடியாகப் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படி, தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குத் தமிழக அரசின் நிவாரணத் தொகை வந்து பல நாட்கள் ஆகின்றன. விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்களில் ஏற்பட்ட குளறுபடிகளால் பலருக்கு இன்னும் பணம் போய்ச் சேரவில்லை. வங்கி கணக்கு விவரங்கள் சரி செய்யப்பட்டு, மீண்டும் அதன் நகல்கள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படவில்லை. எனவே, உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


