தூத்துக்குடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியதில், சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதுத் தெருவைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கரை திரும்பிக் கொண்டிருந்தபோது, கரைக்கு 16 கடல் மைல் தொலைவில் படகின் என்ஜின் பகுதியில் திடீரென ஓட்டை விழுந்து கடல் நீர் உள்ளே புகுந்தது.
படகு மூழ்குவதைக் கண்ட மீனவர்கள், அருகில் இருந்த மற்ற இரு விசைப்படகுகளுக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த சக மீனவர்கள், படகில் இருந்த 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். விபத்துக்குள்ளான படகைக் கயிறு கட்டி இழுத்து வர முயன்றபோது, கரைக்கு 3 கடல் மைல் தொலைவில் படகு முழுமையாக நீரில் மூழ்கியது.
மூழ்கிய விசைப்படகின் மதிப்பு சுமார் ரூ. 30 லட்சம் ஆகும். படகில் இருந்த சுமார் ரூ. 80,000 மதிப்பிலான மீன்களும் கடலில் மூழ்கின. இந்த விபத்தினால் அப்படகை நம்பியிருந்த 25 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக விபத்து குறித்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


