தூத்துக்குடி தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமானம தெப்பக்குளம் சுமார் 140 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பத் உற்சவம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும் மேலும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.75 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி தெப்பக்குளத்தின் இரண்டு பகுதிகளிலும் பழமையான சுவர்கள் இடிந்து சேதமானது. மேலும் புதிதாக தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட கிரானைட் கற்கள் உடைந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் தெப்பக்குளத்தைஆய்வு செய்தனர் இந்த தெப்பக்குளம் பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து சீரமைக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தனர்.
ஆனால் தெப்பக்குளம் சேதமாகி ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் எஸ் சண்முகசுந்தரம் கூறியதாவது “ஆண்டுதோறும் தைப்பூசம் திருநாளில் சிவன் கோவிலில் தெப்ப உற்சவம் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. தற்போது வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
ஆனால் சேதமடைந்த சுவர்கள் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி ஏற்பட்ட பள்ளம் ஆகியவை சீரமைக்கப்படாததால் பொதுப்பணித்துறை சார்பில் தெப்பத் திருவிழா நடத்த அனுமதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்யாமல் செய்த பணிகள் காரணமாக மக்கள் வரிப்பணம் ரூ.75 லட்சம் வீணாகி உள்ளது. எனவே தெப்பக்குளத்தை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சிவன் கோயில் பிரதான பட்டர் செல்வம் கூறியதாவது “தைப்பூசம் திருநாளில் ஆண்டுதோறும் சிவன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம் தற்போது தெப்பக்குளத்தில் விரிசல் ஏற்பட்டு பள்ளங்கள் விழுந்ததால் சுவர்கள் உள்ளே சென்று இருப்பதால் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்று மேயர் மற்றும் அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனால் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறாது என்றார்.


