
சமூக சீர்திருத்தத்தில் பெண் ஆளுமை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
உண்மையான தலைமைத்துவம் என்பது “அசாதாரணமான ஒரு விஷயத்தை நிகழ்த்திக்காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான வழியை உருவாக்குவது பற்றியதே” என்று கிரீன்டெக்கின் ஆலன் கீத் என்பவர் குறிப்பிடுகஇவ்வாறு…என்று கிரீன்டெக்கின் ஆலன் கீத் என்பவர் குறிப்பிடுகிறார். அதே கருத்தை, கென் ஆக்போனியா என்ற மற்றொரு அறிஞர்
“நிறுவன அல்லது சமூக இலக்குகளை அடையச்செய்வதற்கான மூலாதாரங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து அதிகப்படுத்தச் செய்கின்ற திறனே ஆற்றல்மிக்க தலைமைத்துவம்” என்கிறார்.
இத்தகைய மகத்தான தலைமைப் பண்புகளைப் பெற்று, தமிழகத்தின் சமூக வரலாற்றில் அழியாத தடம் பதித்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்.
இந்தியப் பெண் தலைமைத்துவம் என்பது ஆண் தலைமைத்துவத்திற்கு இணையாகக் குடும்பம், சமூகம், பொருளாதாரம், அரசியல் என்று எந்தத் தளத்திலும் முழுமையாக ஏற்கப்படாத காலத்தில், தனது அறிவாலும் போராட்டத்தாலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமை அவர்.
தேவதாசி முறை ஒழிப்பு
**********
இந்தியாவில் தேவதாசி முறை என்பது பெண்களைத் தெய்வத்தொண்டிற்கு அர்ப்பணிக்கும் ஒரு சமயம் சார்ந்த வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இத்தகைய எதிர்பாராத அரசியல் மற்றும் சமூகச் சூழல்களால், தேவதாசியர் மெல்ல மெல்ல தங்கள் புனிதத் தன்மையை இழந்து மக்களால் பொது மகளிராகவே பார்க்கப்படும் நிலையை அடைந்தனர்.
18-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இம்முறை பெண்களுக்கு எதிரான கொடுமையாக மாறியிருந்தது.
இந்தச் சமூகத் தீமைக்கு எதிராகத் திருநெல்வேலியில்
ஏமிகார்மைக்கேல் என்ற அயர்லாந்து தேசத்துப்பெண் முதன்முதலாக எதிர்த்துக் குரல் கொடுத்த வந்த நிலையில், அதனை வேரறுக்கச் சட்டப்பூர்வமாகப் போராடியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
இந்தியாவிலேயே முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டினார்.
சட்டப் போராட்டமும் சாதனையும்
இந்தியாவிலேயே முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1930-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி, ‘சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட’ முன்வரைவைச் சென்னை சட்டமன்ற மேலவையில் முன்மொழிந்தார்.
சத்தியமூர்த்தியின் வாதமும் முத்துலட்சுமியின் அதிரடிப் பதிலும் இந்தச் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, சத்தியமூர்த்தி போன்றவர்கள் இச்சட்டத்தை எதிர்த்து வாதிட்டனர். சத்தியமூர்த்தி பேசுகையில்,
“தேவதாசி முறை என்பது நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதத்தோடு இணைந்தது; தேவதாசிகள் என்பவர் கலைகளைக் காப்பவர்கள். அவர்களை அழிப்பது நமது பண்பாட்டிற்கே இழுக்கு. அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லப் பிறந்தவர்கள்” என்ற ரீதியில் வாதிட்டார்.
அப்போது முத்துலட்சுமி ரெட்டி எவ்விதத் தயக்கமுமின்றி மிகவும் ஆவேசமாகவும் தர்க்கரீதியாகவும் தனது பதிலடியைப் பதிவு செய்தார்,இவ்வாறு….
”மதத்தின் பெயராலும், கலைகளின் பெயராலும் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதுதான் கலாச்சாரம் என்றால் அத்தகைய கலாச்சாரம் நமக்குத் தேவையில்லை. தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்று நீங்கள் நம்பினால், உங்களது வீட்டுப் பெண்களை ஏன் தேவதாசிகளாக்கி சொர்க்கத்திற்கு அனுப்பக்கூடாது?” என்று அவர் கேட்ட கேள்வி, அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தின் முகத்தில் அறைந்தாற்போல அமைந்தது. அவரது இந்தத் துணிச்சலான வாதம் தேவதாசி முறைக்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.
சாதனையும் முடிவுரையும்
பல்வேறு வைதீக எதிர்ப்புகளால் உடனடியாகச் சட்டமாக்கப்படாமல் போன இம்மசோதா, இவரது தொடர் முயற்சியால் இந்திய விடுதலைக்குப் பின்னர் அக்டோபர் 9, 1947-ஆம் ஆண்டு ‘தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்’ ஆக நிறைவேற்றப்பட்டது. இவருடன் சமகாலத்தவரான மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
பெண் காலாகாலமாகத் தன்னிலும் கீழானவள் என்றே காட்டிக்கொள்ள ஆணினத்தின் பெரும்பாலானோரால் கட்டமைக்கப்பட்ட மாயத்தோற்றங்களை உடைத்தெறிந்தவர்
முத்துலட்சுமி ரெட்டி. மக்கள் தொண்டினையே தம் வாழ்நாள் சேவையாகக் கருதி, சமூகத்தைச் சீரழித்த அமைப்புகளை வேரறுக்க அவர் காட்டிய தலைமைத்துவம் என்றும் போற்றத்தக்கது. அந்தப் புரட்சி நாயகியின் சாதனைகளை நினைவு கூர்வது அவரது பிறந்த நாளான (ஜூலை 30, 1886) இன்று சமூக நீதிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.


