
சாத்தான்குளம் அருகே கோயில் கொடை விழாவில் சாமியாடிய சாமியாடி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி வடக்கு ராமசாமி புரத்தைச் சேர்ந்தவர் கந்தன் மகன் ஆறுமுகம் சுரேஷ் (45). இவருக்கு மனைவி பாரதி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். மனைவி நாகர்கோவிலில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடுவக்குறிச்சி சாலைபுதூரில் உள்ள சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது. இதில் ஆறுமுகசுரேஷ் சாமியாடினார்.
அப்போது கிடா வெட்டி ஆட்டின் ரத்தத்தை குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கோயிலில் அனைவரும் படுத்து உறங்கியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) அதிகாலை ஆறுமுகம் சுரேஷ் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் அவரை திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் பால சுரேஷ் (52) தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.