நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆலோசனை.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியிலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் காணம் நகர பஞ்சாயத்துகளுக்கு வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவைகுண்டம், ஏரல், பெருங்குளம் மற்றும் சாயர்புரம் ஆகிய நகர பஞ்சாயத்துக்களுக்கு சாயர்புரம் போப்ஸ் கல்லூரியிலும், ஆழ்வார்திருநகரி மற்றும் தென்திருப்பேரை நகர பஞ்சாயத்துகளுக்கு ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளியிலும், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் நாசரேத் ஆகிய நகர பஞ்சாயத்துகளுக்கு நாசரேத் பிரகாசபுரம் புனிதமரியன்னை நடுநிலைப் பள்ளியிலும், கோவில்பட்டி நகராட்சிக்கு கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கழுகுமலை நகர பஞ்சாயத்துக்கு கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கயத்தாறு நகர பஞ்சாயத்துக்கு கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப் பள்ளியிலும், விளாத்திக்குளம், எட்டயாபுரம் மற்றும் வி.புதூர் நகர பஞ்சாயத்துகளுக்கு எட்டயாபுரம் பாரதியார் சென்டனரி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 இடங்களில் நாளை மறுநாள் 22.02.2022 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தற்போது வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் முதல் அடுக்காகவும், ஆயுதப்படை காவலர்கள் இரண்டாவது அடுக்காகவும், தாலுகா காவலர்கள் மூன்றாவது அடுக்காகவும் 600 போலீசார் துப்பாக்கி ஏந்தியும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நாளான 22.02.2022 அன்று 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 14 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 40 காவல் ஆய்வாளர்கள், 230 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் , தூத்துக்குடி நகரம் கணேஷ், விளாத்திக்குளம் பிரகாஷ், கோவில்பட்டி உதயசூரியன், மணியாச்சி சங்கர், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், சாத்தான்குளம் ராஜு, மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், ஆயுதப்படை கண்ணபிரான், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஷாமளாதேவி, பவித்ரா உள்ளிட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.