தூத்துக்குடியில் வருகிற 24ம் தேதி நடைபெறும் ஆண் மற்றும் பெண்களுக்கான மினி மரத்தான் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதி மொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். இதனை நினைவு கூறும் வகையில் காவல்துறையில் பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும். அதன்படி வரும் 24.10.2021 தேதி அன்று ஆண்கள், பெண்களுக்கான குறுந்தொடரோட்டப் போட்டி (Mini Marathon) நடைபெற உள்ளது.
இந்த குறுந்தொடரோட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக ரொக்கப்பரிசாக முதல் பரிசு ரூபாய் 3,000/-, இரண்டாவது பரிசு ரூபாய் 2,000/- மற்றும் 3வது பரிசு ரூபாய் 1,000/- வழங்கப்படும். ஆண்களுக்கான 7 கி.மீ தூர குறுந்தொடரோட்டப்போட்டி 24.10.2021 அன்று காலை 06.00 மணிக்கு தூத்துக்குடி தருவை மைதானத்திலிருந்து புறப்பட்டு ரோச் பூங்கா வழியாக தெர்மல் நகர் மற்றும் புதியதுறைமுகம் விலக்கு வரை சென்று திரும்பி மீண்டும் ரோச் பூங்கா வந்தடையும், இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு தருவை மைதானத்திற்கு வரவேண்டும்.
அதே போன்று பெண்களுக்கான 5 கி.மீ தூர குறுந்தொரோட்டப்போட்டி 24.10.2021 அன்று காலை 06.30 மணிக்கு தூத்துக்குடி தருவை மைதானத்திலிருந்து புறப்பட்டு ரோச் பூங்கா வழியாக ரெயில்வே பாதை அருகில் உள்ள உப்புத்தொழிற்சாலை வரை சென்று திரும்பி மீண்டும் ரோச் பூங்கா வந்தடையும், இதில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு தருவை மைதானத்திற்கு வரவேண்டும்.
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் தங்களது பெயர்களை நேரிலோ அல்லது 2310351 என்ற எண்ணிற்கு தொலைபேசியிலோ 23.10.2021 அன்று மாலை 4 மணிவரை பதிவு செய்து கொள்ளலாம், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வீரர், வீராங்கனைகளுக்கு இதன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.


