எட்டையாபுரத்தில் டிவி மெக்கானிக் கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகேயுள்ள குமாரகிரி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31) என்பவர் எட்டையாபுரம் நடுவிற்பட்டி பகுதியில் அவரது உறவினரின் எல்க்ட்ரிக்கல் கடையில் டி.வி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரை மேற்படி டி.வி மெக்கானிக் கடையில் வைத்து இன்று (20.10.2021) மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூரிய ராகவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது தலைமையில் உதவி ஆய்வாளர் பொன்ராஜ், முதல் நிலை காவலர் பாண்டியராஜ் மற்றும் காவலர் முனீஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த 21வயது பெண் ஒருவரை கொலையுண்ட சூரிய ராகவன் (31) கடந்த 2 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு முன்பு சோழபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் (22) என்பவர் சூரிய ராகவனின் மனைவியான அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார்.
தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை சூரிய ராகவன் திருமண செய்து கொண்டதால், அவர் மீது ஆத்திமடைந்த ஆனந்தராஜ், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இன்று சூரிய ராகவன் வேலை செய்யும் கடைக்கு சென்று அவரிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி ஆனந்தராஜை கைது செய்து, அவரிடமிருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு எதிரியை உடனே கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


