எட்டயபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட டிவி மெக்கானிக் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரி புதூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்ய ராகவன் (31), டி.வி. மெக்கானிக். இவர் எட்டயபுரம் மெயின் பஜாரில் கடை நடத்தி வருகிறார். இன்று காலை 11 மணியளவில் கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சூர்ய ராகவனின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், துண்டிக்கப்பட்ட சூர்ய ராகவனின் தலை மற்றும் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்ய ராகவனுக்கு கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் நடந்துள்ளது. எனவே காதல் தகராறில் இந்த கொலை நடைபெற்றதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஜாரில், பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


