குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், செயலாளர், துணை செயலாளர், நகை மதிப்பீட்டாளர், கள அலுவலர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனையடுத்து யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும் என்பது குறித்தும், இதனை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது தெரியாமல் வங்கி அதிகாரிகள் விழிபிதுங்கி நின்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி மேல் அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தலைவராக நாலுமாவடியை சேர்ந்த முருகேசப்பாண்டியனும், செயலாளராகத் திருச்செந்தூரைச் சேர்ந்த தேவராஜும், துணை செயலாளராக குரும்பூரை சேர்ந்த ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் ஆழ்வை. வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலரும், கூட்டுறவு சார்பதிவாளரான ஆழ்வார் குமாரிடம் குரும்பூர் வங்கியின் நகை அடமான கடன் குறித்தும் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர்கள் கேட்டறிந்தனர். அப்போது அவர் நான் அனைத்து நகைக்கடனையும் ஆய்வு செய்துவிட்டேன் அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் அவரே ஒரு நாள் ஆய்வு செய்ததில் ஏதோ சில குளறுபடிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 8ம் தேதி மற்றும் 13ம் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மொத்தம் நகைக்கடனாகப் பெறப்பட்ட 548 கிராம் நகையில் 261 கிராம் நகை மாயமானது ஆய்வில் தெரியவந்தது. இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கியின் வாடிக்கையாளர்களுக்குத் தெரியவந்ததால் அவர்கள் தங்கள் நகை இருக்கிறதா என்று பார்ப்பதாக வங்கியின் முன் திரண்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் வங்கியில் டெப்பாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் வந்து பார்த்தபோது, டெப்பாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்குப் போலியான பாண்ட் கொடுத்தது தெரியவந்தது. தொடர்ச்சியாக வங்கியில் லட்சணக்கில் பணத்தை டெப்பாசிட் செய்த வாடிக்கையாளர்கள் விசாரணை குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
இதனால் பண மோசடி ரூ.3 கோடிக்கும் மேல் செல்லலாம் என்று தெரியவருகிறது. இதனையடுத்து வங்கி தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வை. வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


