
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட 27 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமி காணாமல் போன வழக்கில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, திருநெல்வேலி பொருட்காட்சி திடல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த காணாமல் போன சிறுமியை சில மணி நேரத்திற்குள் மீட்ட தூத்துக்குடி பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா, முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தர்ராஜ், முதல் நிலை காவலர்கள் சதீஷ் தணிகைராஜா மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து 3 கிலோ 400 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள், உதவி ஆய்வாளர் சிவராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கயத்தார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 6 கிராமங்களில் 21 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், செட்டிகுறிச்சி கிராமத்தில் புதிதாக புறக்காவல் நிலையத்தையும் அமைத்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலீப், பால், காவலர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சந்தேகத்திற்கிடமான மரண வழக்கில் இறந்து போன நபரின் மரணம் சந்தேகத்திற்கு உரியதாக இருந்து வந்த நிலையில் செல்போன் எண் மூலம் எதிரியை இரண்டு நாட்களில் கைது செய்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பால்ராஜ், விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மகேந்திரன் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கின் எதிரிக்கு 06.01.2021 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைத்து கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் பதுங்கியிருந்த எதிரியை கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கை நாதபாண்டியன், சூரங்குடி காவல் நிலைய தலைமை காவலர்கள் ராஜபாண்டி மற்றும் சங்கிலி முருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எதிரியை கைது செய்து 3 கிலோ 400 கிராம் கஞ்சாவை கைப்பற்ற உதவியாக இருந்தும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ய உதவியாக இருந்தும், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடந்த கொலை வழக்கின் எதிரிகள் மூன்று பேர்களை கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் செந்தில், திருமணிராஜன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி ஆயுதப்படை வாகன பிரிவில் பணிபுரிந்து வரும் காவலரின் குடும்ப உறுப்பினரின் அறுவை சிகிச்சைக்கு மிகவும் அரிய வகையான O நெகட்டிவ் வகை ரத்தத்தை தானமாக வழங்கிய எட்டயாபுரம் காவல் நிலைய காவலர் சிவபாலன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட 27 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து அவர்கள் உடனிருந்தனர்.