தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கிராமம் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் பொன்ராஜ் (45). இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரமதி (35). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றம் ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக தம்பதியர் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டது போல் செயல்பட்டதாகவும், சந்திரமதி கணவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சந்திரமதி தனது வீட்டு வாசலில் வைத்து கணவரை குத்துவிளக்கால் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்ராஜை அப்பகுதியினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கணவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


