தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 450 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பாம்பு கடித்து மரணமடைந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும், நீரில் மூழ்கி மரணமடைந்த 1 நபரின் வாரிசுதாரருக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையும், வீடு இடிந்து விழுந்து இறந்த 1 நபரின் வாரிசுதாரருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலை என ரூ. 5 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
மேலும், இளம் அறிவியல் விருது பெற்ற பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் ஷகில் இஷாஸ், பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சி உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை 04.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து பாராட்டு பெற்றார். மேலும், மாவட்ட ஆட்சியர் , மாணவரின் திறமையை பாராட்டியதோடு, பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சி 5 எண்ணம் தயாரிக்கும்படி கூறியதோடு, மாணவருக்கு உதவும்படி துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் இன்று மாணவர் ஷகில் இஷாஸ் தயாரித்த 3 பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சிகளை மாற்றுத்திறனாளிகள் 3 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கியதோடு இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்தி புதிய வடிவிலான மடக்கு குச்சிகளை தயாரிக்க மாணவனுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


