தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு தோழப்பன்பண்ணையில் பொய்சொல்லாமெய்யன் சாஸ்தா கோயில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விசேஷமானது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்.
இந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவும், ஏப்ரல் 9ம் தேதி பெரியசாமி குருபூஜையும், ஏப்ரல் 14ஆம் தேதி பூக்குழி திருவிழாவும் நடந்தது.. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொய் சொல்லா மெய்யன் சாஸ்தா கோவிலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிரந்தர உண்டியலை எண்ணும் பணி நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உண்டியல் எண்ணும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்தது.
இந்நிலையில் நிரந்தர உண்டியலை திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி இன்று கோயில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையிலும் ஆய்வாளர் நம்பி முன்னிலையிலும் நடந்தது. இரண்டும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.


