ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் வெள்ளைச்சாமி (34). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது நண்பர்கள் பேச்சிராஜா, தேவேந்திரன் ஆகியோருடன் ஏரலுக்கு சென்று தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெள்ளைச்சாமி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரல் போலீசாரும், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி வெள்ளைச்சாமியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த வெள்ளைச்சாமிக்கு முத்துமாரி என்ற மனைவியும், பானு என்ற மகளும், தீபன் என்ற மகனும் உள்ளனர். ஆற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


