கி.பி. 1100 வருடங்களுக்கு முன்பு சிற்றரசர்களாக வாழ்ந்தவர்கள்தான் சிங்கம்பட்டி ஜமீன்தாரின் முன்னோர்கள். இவர்கள் “சிறுதாலி கட்டிய மறவர்” என்று அழைக்கப்படுகிறார்கள். சேதுபதி சமஸ்தானத்தை விட்டு விலகும் முன்பே இவர்கள் “கல்த்தேர் இழுத்த மறவர்” என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களின் முன்னோர்கள் ஸ்ரீ அபோதாரணத்தேவர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த குடிபெயர்ந்து வந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள தேவநல்லூர் கிராமத்தில் குடியேறினார்கள். அபோதாரணத்தேவர் மகள் வழி மகனை சிங்கம்பட்டி வல்லையர் மன்னன் தத்து எடுத்துக்கொண்டார். அவர் பெயர் பிரிதிபாலு. அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க அபோதாரணத்தேவர் உதவி புரிந்து வெற்றி கிடைக்க வழிகோலினார். முதல் பட்டமாக ஆட்சியில் பிரிதிபாலுடன் அமர்ந்தார். அதன் பிறகு 31 வது பட்டமாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா பட்டங்கட்டிய ஜமீன்தாராக வாழ்ந்து சமீபத்தில் மண்ணை விட்டு மறைந்தார்.
திருவாங்கூரை தலைநகராக கொண்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்டு வந்தார். இவர் சிறுவயதில் தந்தையை இழந்து விட்டார். சிறுவனான மார்த்தாண்ட வர்மாவை விரட்டிவிட்டு ஆட்சியை பிடிக்க அவரது உறவுகாரர்களான எட்டு வீட்டு பிள்ளைமார்கள் திட்டமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மகராணியார் உலகம்மை குழந்தையோடு தப்பி ஓடி பொதிகை மலையில் ஒழிந்து கொண்டார். பின்னர் சொரிமுத்து அய்யனார் கோயிலில் வைத்து பாளையக்காரர் சிங்கம் பட்டியாரை சந்திக்கின்றனர்.
அவரது கதையை கேட்டதும் எட்டு வீட்டு பிள்ளைமார்கள் மீது சிங்கம்பட்டியார் வெறி கொண்டார். சேர மன்னருக்கு நல்லாதரவு கொடுத்தார் அவருக்கு வில் வீச்சில், வாள் வீச்சில் நெளிவு சுழிவுகளை கற்று கொடுத்து திறன் மிகுந்த படைத்தலைவனாக உருவாக்கினார். வாலிப பருவம் அடைந்ததும் சேரமன்னர் பெரும் படையை திரட்டி மண்ணை மீட்க கிளம்பினார். அவருடன் முக்கிய வீரராக தனது மூத்த மகனையும் சிங்கம்பட்டியார் அனுப்பி வைத்தார் பெரும் படை திருவாங்கூர் சென்று எட்டுவீட்டு பிள்ளைமாரை விரட்டியது. ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறினார் மார்த்தாண்ட வர்மன். போரில் சிங்கம்பட்டியாரின் மகன் மார்பில் அம்பு பாய்ந்து வீரமரணம் அடைந்தார். அவருக்கு என்ன கைமாறு செய்ய வேண்டும் என்றே சேரமன்னருக்கு புரியவில்லை. அவரது தாயார் உமையம்மை ராணி ஜமீன்தாரின் மகனுக்கு “இறப்பின் பின் சிறப்பு” என்ற வெகுமதியாக “நல்லகுத்தி” என்ற சிறப்புப் பட்டத்தைச் சூட்டினார். இது நாளடைவில் திரிந்து “நல்லகுட்டி” என்று வழங்கப்படுகிறது.
அன்று முதல் “தென்னாட்டுப்புலி நல்லகுட்டி” என்ற சிறப்பு பெயரை அவர்கள் தங்கள் பெயரோடு சேர்த்து அழைக்க ஆரம்பித்தனர். இழந்த மண்ணை மீட்க உதவியதற்கு கைமாறாக சிங்கம்பட்டியாரிடம் எது கேட்டாலும் தருகிறேன் என்று சேரமன்னர் கேட்கிறார். அதற்கு “மன்னா, உங்களை ஜெயிக்க வைக்க வேண்டும். இழந்த அரசை மீட்டுத்தரவேண்டும் என்று எண்ணினேன். அதை முடித்து விட்டேன். என் மகன் வாள் வித்தையில் வீரன் தான். ஆனாலும் உங்களுக்காக உயிரை கொடுத்து வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டான். ஆகவே சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு ஏதாவது தரவேண்டும் என்றால் இந்த மலையில் எங்களுக்கு குச்சி ஒடிக்க காடு தந்தால் போதும்” என்றார்.
“குச்சி ஒடிக்க என்ன காடு… இந்த காடே உமக்குதான் என்று மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள 80 ஆயிரம் ஏக்கர் வனப் பகுதியையும் 5 கிராமங்களையும் சாஸ்தாவின் மூலாதார ஷேத்திரமான காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ள 8 கோயில்களையும், 5 ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் தோப்பு துரவுக¬யும் அடங்கிய பகுதியை கொடுத்தார் சேர மன்னர். ஜமீன் ஒழிப்புசட்டம் வரும் வரை இந்த இடத்தை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்கள் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த ஜமீனுக்கு தனிச்சிறப்பு “வான் பொய்த்தாலும் நான் பொய்யேன்” என்று பாயும் தாமிரபரணி நதியும் அதன் துணைநதிகளான மணிமுத்தாறு, பச்சையாறு ஆகியவையும் ஆகும். பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்றவை இந்த 80 ஆயிரம் ஏக்கருக்கு உட்பட்ட பகுதியில் உள்ளன. சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நரசிம்மபாரதி வனபிரதேசத்தில் உள்ள பாண தீர்த்தத்திற்கு வந்திருந்தார். இந்த தீர்த்ததிற்கெல்லாம் அதிபதியாக உள்ள சிங்கம்பட்டி ஜமீன்தாரை அழைத்து, “தீர்த்தபதி” என்றழைத்து பட்டம் சூட்டினார். அதன்பிறகு இவர்கள் “தீர்த்தபதி ராஜா” என்றே அழைக்கப்பட்டார்கள் .
இப்படி இருககும் போதுதான் முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவின் தந்தை வழியாக ஒரு பிரச்சனை வந்தது.
அவரும் கடம்பூர் ஜமீன்தார் மகனும் சென்னையில் கல்வி கற்று வந்தனர். அங்கு ஜமீன்தார் பிள்ளைகளும் மற்றும் மேட்டுக்குடி மக்களின் பிள்ளைகளும் படிப்பதற்கென்று ஒரு சிறப்பு பள்ளி (ஐன்ஸ்டீன் ஸ்கூல்) ஒன்று இயங்கி வந்தது. இப்பள்ளியின் நிர்வாகத்தை ஆங்கில ஆசிரியர்கள் கவனித்து வந்தனர். இங்கு பயிலும் மாணவர்கள் ஆங்கிலக் கல்வி கற்று வந்தனர். இப்பள்ளியின் பெயர் நியூ வின்ங்டன் என்பதாகும். ஜமீன்தார் பிள்ளைகளுக்கு சில சிறப்பு பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வந்தன. அவைகள் குதிரையேற்றம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளாகும்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாகிய ஜமீன்தார் வீட்டுப்பிள்ளைகள் என்பதால் செல்வச்செழிப்பில் வளர்ந்து வந்தனர். அவர்களிடம் குறும்புச் சேட்டைகள் மிக அதிகமாக இருந்தது. சேட்டை செய்யும் மாணவர்களிடம் சற்று கண்டிப்பான முறையில் தான் அப்பள்ளியின் பிரின்ஸ்பால் நடந்து கொள்வார். சிங்கம்பட்டி ஜமீன்தார் மகனும், கடம்பூர் ஜமீன்தார் மகனும் அடிக்கடி குறும்புத்தனங்கள் செய்து வந்தனர். ஒரு சமயம் குறும்புத்தனங்கள் அதிகமாகவே, ஜாதிப்பெயரைச் சொல்லி அம்மாணவர்களை கடினமான வார்த்தைகளால் பிரின்ஸ்பால் திட்டியுள்ளார். இதைக்கேட்ட இவ்விருமாணவர்கள் வெகுண்டெழுந்தனர். சகமாணவர்கள் அனைவரும் அவ்வாசிரியர் மீது கோபம் கொண்டனர். மற்ற மாணவர்களும் அவ்விருவரையும் சீண்டி விட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் அவ்வாறு பேசிய வெள்ளைக்கார ஆசிரியரை வகுப்பறையில் பகிரங்க மன்னிப்பு கோரும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு அவ்வாசிரியர் இணங்கவில்லை. அதனால் அவ்விரு மாணவர்கள் மனதில் பழிவாங்கும் எண்ணம் தோன்றியது. சுயமரியாதை, தன்மான உணர்வுகள் அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததால் அவ்வாசிரியரை எவ்விதத்திலாவது தண்டித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டனர்.
அத்திட்டத்தின்படி ஒரு நாள் தங்களுக்கு பயிற்சியளித்து வந்த துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் முதல் நாள் மாலையே இவ்விருவரும் கைப்பற்றி வைத்துக் கொண்டனர். தங்களை திட்டிய ஆசிரியர் தினமும் அதிகாலை எழுந்து வெகுதூரம் காலாற நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அச்சமயம் பார்த்து, தங்கள் கைவசம் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு வீழ்த்தி விட்டனர். அவ்வாசிரியரும் அவ்விடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் நடந்த நாள் 15 அக்டேபர் 1919 வருடம்.
தலைநகரம் சென்னையில் ஒரு வெள்ளைக்கார ஆசிரியர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல நகரெங்கும் பரவியது. தங்கள் ஆட்சியில் தலைநகரிலேயே ஒரு வெள்ளைக்கார ஆசிரியரை சுட்டுக் கொன்ற செயல், ஆங்கில ஆட்சியாளரை கடுங்கோபம் கொள்ளச் செய்தது. உடனடியாக அவ்விரு மாணவர்களையும் கைது செய்து விட்டனர். இச்சம்பவம் நடந்த சமயம் இளையரசனேந்தல் ஜமீன்தார் அப்பாசுவாமி நாயுடு சென்னையில் இருந்துள்ளார். இக்கொலைச் சம்பவத்தையும், குற்றவாளிகள் யார் யார் என்பதையும் தெரிந்து கொண்டார். அன்று மாலை வழக்கம் போல கவர்னரும் தியாகராயர் இல்லத்திற்கு வந்துள்ளார். கொலை சம்பவத்தைப் பற்றியும், ஜமீன்தார் பையன்கள் தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்ற விவரத்திதையும் வருத்தத்துடனும் சற்று கோபத்துடனும் சொல்லியுள்ளார்.
ஏற்கனவே அப்பையன்களின் தந்தைமார் அப்பாசுவாமி நாயுடுவுக்கும், சர்.பிட்டி. தியாகாராயருக்கும் நண்பர்கள் என்று கவர்னருக்கு தெரியும். எனவே என்ன செய்ய என்று கவர்னர் இவர்களிடம் கேட்டுள்ளார். பாவம் பாதிக்கப்பட்ட இனத்தினை சேர்ந்தவர் கவர்னர். அவர் மனம் நோக கூடாது . எனவே தாங்கள் முறைப்படி நடவடிக்கை எடுங்கள் என கூறிவிட்டனர்.
ஆனால் சிங்கம்பட்டி ஜமீன்தார் அப்பாசுவாமி நாயுடுவிடம் வந்து எப்படியாவது என் மகனை காப்பாற்றி கொடுங்கள் என்று கேட்டார். அதற்கும் சரி என்று தலையசைத்து விட்டார்.
இது ஒரு சிக்கலான பிரச்சனை என்று அப்பாசுவாமி நாயுடுவிற்கே தெரியும். வெள்ளைக்காரர் ஆட்சியில் அவர்களின் இனத்தான் ஒருவனையே சுட்டுக் கொன்றதை வெள்ளை அதிகாரிகள் எப்படி விட்டு கொடுப்பார்கள். ஏற்கனவே ஆங்கிலேயர்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் அவர்களிடம் இருந்து எப்படி இரு ஜமீன் வாரிசுகளையும் காப்பாற்ற என தெரியாமல் தவித்தார்.
அப்பாசுவாமி நாயுடு சட்ட விரோதமாக குறுக்கு வழியில் வழக்கை முடிக்க எண்ணவில்லை. சட்டத்தின் வாயிலாகவே விடுதலை பெற நினைத்தார். சிங்கம்பட்டி ஜமீன்தார், அப்பாசுவாமி நாயுடு எப்படியும் தம் பையனை காப்பாற்றி விடுவார் என்ற திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவரின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.
அப்பாசுவாமி நாயுடு , தியாகராயரின் இல்லத்திற்கு வந்திருந்த கவர்னரிடம் சாதுர்யமாகப் பேசி, அவரை சமாதானம் செய்து, அவர் திருப்தி அடையும் படி விஷயங்களை பக்குவமாக எடுத்துச் சொல்லியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இளம் வயதினர். மேலும் ஜமீன் அந்தஸ்து பெற்றவர்கள். கௌரவத்தன்மை இவையெல்லாம் சேர்ந்து அப்பையன்களை உணர்ச்சியடையச் செந்திருக்கிறது. இறந்து போன ஆசிரியர் ஜாதியைக் குறித்து திட்டயதால் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் இச்செயலை சிந்திக்காமல் செய்து விட்டனர் என விளக்கினார்.
இவ்வழக்கானது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நீதிமன்றத்திலேயே வைத்து எப்படியும் தன் மகனை விடுதலையாக்கி விட வேண்டுமென சிங்கம்பட்டி ஜமீன்தார் அப்பாசுவாமியிடம் வேண்டியுள்ளார்.
ஆனால் முடிந்ததா-?. சிங்கம்பட்டி ஜமீன்தார் மகன் விடுதலை செய்யப்பட்டாரா?
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


