இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் என்று நண்பர்களின் காலை வணக்கம் ஞாபகப்படுத்துகிறது.நம்முடைய கட்டைவிரல் அளவு கூட சிட்டுக்குருவிகள் உண்டு.
பெரும்பாலும் நாம் குறிப்பிடுகின்ற குருவி சிட்டுக்குருவிகளில் ஒருவகை.கிராமங்களில் இதை அடைக்கலாம் குருவி என்றே குறிப்பிடுவர்.இந்தக் குருவிக்கு மரம் செடி தாவரங்களில் கூடுகட்டத் தெரியாது.கூரை வீடுகள் சுவர்களில் உள்ள பொந்துபொடவுகளில் தான் கூடுகட்டும்.மனிதர்களை அண்டி வாழ்வதால் தான் அடைக்கலாம் குருவி என்ற பெயர்.நாம் சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவி தெருவில் ஊற்றினால் உடனே விருட்டென்று இரண்டு குருவிகள் வந்து அதில் உள்ள ஒன்றிரெண்டு சோற்றுப் பருக்கைகளை கொத்திப் பிரக்கும்.இப்போதெல்லாம் யாரும் முற்றத்தில் கழுவி ஊற்றுவதில்லை.வீட்டுக்குள்ளேயே தொட்டியில் ஊற்றி விடுகிறோம்.
அப்புறம் கூரைவீடுகள் அரிதாகப் போய்விட்டது.வீட்டுச்சவர்கள் செங்கல் கான்கிரீட் சுவர்களாக மாறிவிட்டன.கூடுகட்ட இடமில்லை.நவதானியங்கள் சுத்தமாக இல்லை.ஆக அதுகளுக்கு உணவும் கிடைப்பதில்லை.நீக்கமற நிறைந்து வாழ்ந்த அடைக்கலாம் குருவிகள் ஒன்றிரெண்டுகள்தான் தட்டுப்படுகின்றன.
எங்கள் வீட்டினுள் டி.வி.வாங்கிய அட்டைப் பெட்டியை பீரோவின் மேல் வைத்திருந்தோம்.அதற்குள் கூடுகட்டி குஞ்சுகள் பொரித்து கூட்டிப் போயின.அதுவரை அந்த அறையில் நாங்கள் தலைகாட்ட வில்லை.அடைக்கலம் தேடி வந்த குருவிகள் இல்லையா.சூழல் வாழ்வியல் உணவு இருப்பிடம் போன்ற காரணங்களால்தான் இவைகள் அருகிவிட்டனவே ஒழிய பட்டிமன்றப் பேச்சாளர்கள் குறிப்பிடுவது மாதிரி செல்போன் டவர்களின் அலை வீச்சு காரணமல்ல என்று விஞ்ஞானம் சொல்கிறது.
கிராமங்களில் தெரு விளக்குகளின் ஸ்விட்ச் பெட்டி ஒரு மின் கம்பத்தில் இருக்கும்.மாலையில் ஆன் பண்ணி காலையில் ஆஃப் பண்ணி விடுவார்கள்.அந்தப் பெட்டிக்குள் வந்து இந்த அடைக்கலாம் குருவி கூடுகட்டி விட்டது.உடனே ஊர்க்கூட்டம் போட்டு அந்தக்குருவிகள் குஞ்சு பொரித்து கூட்டிப் போகும் வரை தெரு விளக்கு போடக்கூடாது என்று முடிவு செய்து ஏறக்குறைய ஒரு மாசம் தெரு விளக்கு இல்லாமல் இருளில் வாழ்ந்த அந்தக் கிராமத்து மக்களை கையெடுத்து கும்பிட்டேன்.
என்னுடைய “மனுஷம்”சிறுகதை சிட்டுக்குருவிக்குஞ்சுகள் பறந்து போகும்வரை தன் வயலில் அறுவடையை நிறுத்திய சம்சாரியான குஞ்சி நாயக்கரின் கதைதான்.வேறு பத்திரிக்கையில் பிரசுரமான இக்கதையை குமுதம் இதழில் மறுபிரசுரம் செய்திருந்தார் எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.பின்னர் அக்கதை கண்ணுபடப்போகுதய்யா திரைப்படத்தில் ஓபனிங் சீனாகப் பயன்படுத்தப்பட்டது.
அனைவர் வீடுகளின் மொட்டைமாடிகளில் தண்ணீரும் தவசமும் வைத்தால் பறவைகள் வரும்.கூடுகள் கட்ட கூண்டுகளும் வாங்கி வைக்கலாம்.வைத்துப்பாருங்கள் ஒரே மாசத்தில் உங்களின் டென்ஷன் இரத்த அழுத்தம் எல்லாமே குறைந்துவிடும்.சரியான நேரத்துக்கு உணவு தேடி வந்துவிடும்.உங்களை கூப்பிட ஆரம்பிக்கும்.அப்போதே உங்களுக்குள் புதிய உலகம் ஒன்று தென்படும்.நீங்களும் சிட்டுக்குருவி யைப் போல் வானத்தில் பறப்பீர்கள்.
“விட்டு விலகி விடு
அந்த சிட்டுக்குருவியைப் போல்”
மகாகவி.பாரதி.


