108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் குருவுக்கு அதிபதியானதுமான ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதா் திருக்கோவில் அமைந்துள்ளது. இது சுவாமி நம்மாழ்வாா் அவதாரம் செய்த திருத்தலம். சுவாமி நம்மாழ்வாரின் திவ்யமங்கள விக்ரஹம் கிடைத்த நன்னாளைப் போற்றும் முறையிலே ஆண்டுதோறும் மாசி தெப்ப திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் திருவீதி உலா நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான இன்று காலை 6.30 மணிக்கு திருத்தேருக்கு நம்மாழ்வாா் ஏழுந்தருளினாா். தொடா்ந்து எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் ஆச்சாா்ய புருஷா்கள் முன்னிலையில் பக்தா்கள் திருத்தோ் வடம் பிடித்து இழுத்தனா். தோ் 4 ரத வீதிகளில் வலம் வந்தது.
பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷம் முழங்க திருத்தேர் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். நாளை முதல் 2 தினங்கள் தெப்பத்திருவிழா நடைபெறுகின்றது. தொடா்ந்து 12ம் திருநாள் நம்மாழ்வாா் விக்ரஹம் கிடைத்த நாளான மாசி விசாகம் அன்று தாமிரபரணி நதியில் தீா்த்தவாரி நடைபெறுகின்றது.