ஸ்ரீவைகுண்டம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி மகா சிவராத்திரி உற்சவத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் யாதவர் தெருவில் மாதாங்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீகுருநாதசுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதற்காக அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. அதன்பின்னர் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து 10நாட்கள் நடைபெறும் சிவராத்திரி உற்சவ திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 9-ம் நாளான வருகிற பிப்.28ந்தேதி திங்கள் கிழமை முககாப்பு திருவிழாவும், இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, அம்மன் முகம் தேரில் வீதி உலா வந்து இரவு 1 மணிக்கு மேல் அம்மன் முகம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.
10ம் நாளான மார்ச் 1ந்தேதி செவ்வாய்கிழமை மகாசிவராத்திரி அன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இரவு 6மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. விளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து 1 வது காலம் பூஜை இரவு 9 மணிக்கும், 2 வது காலம் பூஜை இரவு 11 மணிக்கும், 3 வது காலம் பூஜை இரவு 12மணிக்கும், அம்மன் தேரில் வீதி உலா நிகழ்ச்சியும் இதனையடுத்து இரவு 3 மணிக்கு 4 வது கால பூஜைகளும் என நான்கு கால பூஜைகள் நடக்கிறது.
அதன்பிறகு சிகர சிறப்பு பூஜைகளான அழகு நிறுத்துதல் விழாவிற்கு இரண்டு வாள் மூன்று மண்குடங்களுடன் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று நீராடி புனித நீர் புதுக்குடங்களில் எடுத்து வாள் புனிதநீர் குடங்களுடன் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று கோவில் மூலஸ்தானத்தில் அம்மன் முன்பு சிறப்பு பூஜைகளுடன் அம்மன் முன்பு அழகு நிறுத்துதல் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராமசாமி மற்றும் கிருஷ்ணன், நடராஜன், சங்கரநாராயணன், நாராயணசாமி உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.