கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு புத்தக பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் மே-21 முதல் ஜூன் – 4ம்தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாணவர்களிடம் வாசிப்புத்திறனை மேம்படுத்திட கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக இளங்கலை பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ200 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.
இந்த பரிசு கூப்பனைக் கொண்டு தங்களுக்கு விருப்பமான புத்தகத்தினை புத்தகத் திருவிழாவில் 15% தள்ளுபடியுடன் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி பேராசிரியர்கள் செல்வலட்சுமி, விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு புதிய மாணவர்களுக்கு ரூ 200 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனை வழங்கினார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


