தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலுக்கு மத்தியிலும் இதமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துள்ள நிலையில், இன்று சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இன்று மழையானது பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக கடந்த ஒரு சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையில் திடீரென திருச்செந்தூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பல நாட்கள் வெயில் மட்டுமே வாட்டி வதைத்த மக்களுக்கு தற்பொழுது கொட்டி தீர்த்த கனமழையினால் பூமி தணிந்து உடலும் குளிர்ச்சியூட்டப்பட்டு மனமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
பலத்த காற்றுடன் பெய்த இந்த கனமழையினால் சாலையோரம் சென்று கொண்டிருந்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முன் விளக்கை ஒளிரவிட்டபடி மழையில் நனைந்த படி ஒன்றன்பின் ஒன்றாக தங்களது வாகனங்களை ஊர்ந்த படி கொண்டு சென்றனர். மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது கைகளில் குடைகளை பிடித்தபடி வெளியே சென்றும் வருகின்றனர்.
திடீரென பெய்த மழையால் திருச்செந்தூர் சிவன் கோவில் முன் மண்டபத்தில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துடன் வந்து சென்றனர்.
தற்பொழுது திருச்செந்தூர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


