ராகுல் காந்தி பிறப்பு: ஜூன் 19, 1970) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.இவர் இந்தியப் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் ஆகும். காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது. இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்.
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.
இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார்.1991 ஆம் ஆண்டில் இவரது தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு சென்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.இவர் 1995 ஆம் ஆண்டு திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் நிறைஞர் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.


