20. காணி இன மக்கள் திருவிழாவும் சடங்குகளும்
பொதிகை மலையை பொறுத்தவரை நாம் மிக பிரமாண்டமாக போற்றப்படும் ஆறுகளையும் காடுகளையும் விலங்குகளையும் பற்றி நிறைய பேசலாம். அதற்கு இணையாக காணி இன மக்களின் வரலாறு பெரிதும் போற்றப்படுகிறது. 2022 புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சி தவைலர் விஷ்ணு அவர்கள் வெளியிட்ட இரண்டாவது காணொலியில் அதை நன்கு விளக்கி இருப்பார்.
பொதிகைமலையின் மேற்குப் பகுதியை நாஞ்சில் பொருநன் என்பவர் ஆண்டு வந்தார். இவரைப்பற்றி புறநானூறு கூறுகிறது. பொதிகை மலையை அடுத்த மோகூரைத் தலைமை யிடமாகக் கொண்டவர் பழையன் மாறன் என்னும் பழந்தமிழ் மன்னன். பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில், பாண்டியனை ஒத்த வலிமை படைத்தவனாகப் பழையன் மாறன் விளங்கி உள்ளார். சோழன் கிள்ளி வளவன், பெருஞ்சேனையுடன் மதுரையைத் தாக்கிய நாளில், இவன், தன்னுடைய மலைநாட்டுப் படைகளையும் குதிரைப் படைகளையும் சிதற அடித்தான் என்று அகநானூற்று பாட்டு 346 மூலம் அறியலாம். இம்மன்னன் கோசரையும், மோரியரையும் வென்றான் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்த அளவுக்குச் சிறந்த போராற்றல் படைத்த, பழைமையான தலைநகர் மோகூர்ஆகும். இந்த நகரம் பொதிகை மலையை அடுத்து இருந்துள்ளது; ஆனால் இம் மோகூர் இன்று என்ன பெயருடன் உள்ளது என்பதை அறிய இயலவில்லை என்கிறார்கள் அறிஞர்கள். ஆனாலும் கூட முன்னாளில் மோகூர் சிறந்த பெருநகரமாக விளங்கி உள்ளது. இத்தகைய பெருமை உடைய மோகூரை கொண்ட பொதிகை மலையில் பழங்குடி மக்களான குறவர்களும், காணிக்காரர்களும், பளியர்களும் வாழ்கின்றனர், மலையில் குடியிருக்கும் குறவர்கள் வாழும் பகுதி குறிஞ்சி என்று கூறப்படுகிறது. குறவர்கள் குறிஞ்சி நில மக்கள் என்பதால் அவர்கள் குடியிருக்கும் பகுதி குறிஞ்சி என்றழைக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மை குறத்தில் குமர குருபர முனிவர் குறவர்களது இயல்புகளையும் விளக்கிக் கூறியுள்ளார்.
அவர்கள் கொழுங்கொடியில் விழுந்த வள்ளிக் கிழங்கைக் கிள்ளி எடுப்பார்கள். குறிஞ்சி மலரையும், முல்லை மலரையும் கொடியில் வைத்துத் தொடுப்பர். பழம் பிழிந்து பழச் சாற்றினையும், பசுந்தேனையும் எடுப்பார்கள். பசுந் தழையினையும், மரவுரியினையும் தங்களது உடையாக அவர்கள் உடுத்துவார்கள். செழுந்தினை என்னும் மாவையும் செந்தேனையும் விருந்தாக விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்வார்கள். வேங்கையின் தோலைப் பிரித்து அதை பாயாக விரித்து படுபார்கள். என்று கூறுவார்.
குறவஞ்சி என்னும் நூல் குறம் என்பதற்குச் சொந்தமானது. அதுவும் குறிஞ்சி நிலத்திற்கு நெருக்கமானது. நெல்லை மாவட்டத்தின் சிறப்பைக் குற்றாலக் குறவஞ்சி மூலமாக நாம் அறியலாம். அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்துக்கே சிறப்பு இந்தக் குறவஞ்சியாகும். ஏனென்றால் இது போன்ற பாடல் தொகுப்பை இம்மாவட்டம் தவிர வேறு எங்கும் காணமுடியாது.
குறவர்களைப் போன்றவர்களில் காணிக்காரர் என்ற வகுப்பினரும் ஒருவர். இவர்கள், தங்களது பெயர்களுடன் “காணி” என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வார்கள். குறிப்பாக ஒருவரின் பெயர் கிருஷ்ணன் என்றால் அவர் கிருஷ்ணன் காணி என்று அழைக்கப்படுவார். இவர்கள் குடியிருக்கும் பகுதியினை “வாடி” என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் காட்டை அழித்து கரடுமுரடானப் பகுதியை திருத்திச் சோளம், கம்பு, மிளகாய், வாழை போன்ற பயிர் வகைகளைப் பயிரிடுகின்றனர்.
அருகில் உள்ள ஊர்களுக்குப் பயிர் செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவற்றிற்குப் பதிலாக அரிசி போன்ற பொருள்களையும், துணிகள் மற்றும் ஆடைகளை வாங்கிச் செல்வார்கள். இந்தப் பண்டமாற்று முறை தற்போது மாறி விட்டது.
இவர்களை மிகவும் பழங்குடியினர் என்று குறிப்பிடுகிறார்கள். “தமிழர்களின் முன்னோர்கள்”என்று அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இம்மக்கள் “கஞ்சா” பயிரிட்டுப் புகைத்திருக்கின்றனர். சிறுவர்களும் பெண்களும் கூட, புகைத்திருக்கின்றனர். (முன்னொருக்காலத்து வழக்கம். தற்போது இவை இல்லை. இப்போது அந்த வழக்கம் உள்ளதா என தேடிச்சென்று விடாதீர்கள்) இவர்கள், அடிக்கடி இடம் மாறுவர். இடம் விட்டு இடம் மாறும்போது புதிய நிலத்தையும் திருத்தி, செப்பனிட்டுக் கொள்வர். இம்மக்கள் முன்பு இருந்ததை விட, தற்போது முன்னேற்றத்துடன் காணப்படுகிறார்கள். காடுகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் இவர்கள் காவல் புரிகின்றனர். காடுகளில் உட் பகுதிகளைக் கண்டறிவதற்கு இவர்களே சிறந்த வழி காட்டிகளாக விளங்குகின்றனர். காட்டு மிருகங்களை, இவர்கள், தங்களது ஒருவகையானக் குரலாலே விரட்டிவிடுகின்றனர்.
இவர்களது குடியிருப்புக்கு நாம் சென்றால், தேனையும் வள்ளிக்கிழங்கையும் நமக்குத் தந்து உபசரிப்பர். நாம் பதிலுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் துணிமணிகள் மட்டுமே பெற்றுக்கொள்வர். இவர்கள் மாடசாமி என்ற மரக்கடவுளையும், சொரி முத்தையன் என்ற ஐயனாரையும், வழிபட்டு வருகின்றனர்.
மாடசாமிக்குக் கோடை நாளில் விழா நடத்துகிறார்கள். ஆடு போன்ற விலங்குகளைப் பலியிட்டு, வெறியாட்டம் ஆடி மகிழ்வார்கள். இவர்கள் தற்போது பொதிகை மலையில் ஐந்து இடத்தில் வாழுகிறார்கள். காட்டை அழிக்கக் கூடாது என்பதற்காக மிகவும் அடர்ந்த காடான இஞ்சுகுழியில் இருந்து கீழே இறக்கி வந்து காரையாறு, மயிலாறு, சின்னமயிலாறு, சேர்வலாறு ஆகிய பகுதியில் இவர்களை அரசு குடிஅமர்த்தியுள்ளது. ஆனாலும் 8 குடும்பங்கள் மட்டும் இஞ்சுகுழியை விட்டு இறங்காமல் வாழ்ந்து வருகின்றனர். பெரிய மயிலாறு பகுதியிலும் காணி மக்கள் வாழ்கின்றனர்.
இதைபற்றி நாம் அடிக்கடி பேசி வருகிறோம்.
என்னுடைய பல நூல்களில் நான் காணி இனத்தவர்களை பற்றி எழுதியுள்ளேன். வசந்த தொலைக்காட்சிக்கு “நெல்லை மண் பேசும் சரித்திரம்” தொடர் தாயாரிப்புக்காக காணி இன மக்கள் குடியிருப்பில் சென்று தங்கியிருந்தோம். என்னோடு அண்ணன் நெல்லை லையன்ஸ் பரமசிவன், கமரா மேன் சங்கர், இயக்குனர் முத்துக்குமார் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அவர்களின் வாழ்கை முறையை அருகில் இருந்து கவனித்து படமாக்கினோம். மிக வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக முதல் முதலில் அவர்களை வீடியோ பதிவு செய்து ஊடகத்தில் வெளியிட்டது நாங்களாகத்தான் இருப்போம். அப்போது யூ டியூப் எல்லாம் பிரபலம் அடையவில்லை. அப்போது தான் காணி இனத்தில் இருந்து படித்து முதல் முதலாக ஒரு பட்டதாரி பெண் உருவாகி இருந்தார். அவரை சேர்வலாறு பகுதியில் நாங்கள் சென்று சந்தித்தோம். பாளையங்கோட்டை கல்லூரியில் அவர் பட்டம் படித்துக்கொண்டிருந்ததாக கூறினார்.
இரவு நேரத்தில் வனத்துறை கட்டி வைத்த பங்களாவில், சேர்வலாறு கரையில் தங்கினோம். சரியாக சொல்லப்போனால் அந்த காட்டுப்பங்களா இரும்பு பாலம் அருகில் இருந்தது. இரவு எங்களுக்கு சரியாக தூக்கம் வரவில்லை. சலசலக்கும் சேர்வலாறு சத்தம் , தூரத்தில் மிருகங்கள் போடும் வித்தியாசமான கூச்சல் எங்கள் மனதில் அச்சத்தினை ஏற்படுத்தியது. காலையில் எழுந்தவுடன் விதவிதமான சத்தத்துடன் பறவைகள் இசைக்க சூரியன் கதிர் சேர்வலாறு மீது பட்டு எதிரொளிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். தற்போதும் எங்கள் கண் முன் அந்த காட்சிகள் நின்றுக்கொண்டேதான் இருக்கிறது.
காலையில் அங்கிருந்த இருக்கைகளை பங்களா முன்பு போட்டு கொண்டு இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தோம்.
மறக்க இயலவில்லை. முதல்நாள் இரவு நிலவொளியில் காணி இன மக்களோடு மக்களாக நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த நாள்கள் எங்கள் மனதில் நீங்காத நினைவுகள்.
அதனால் தான் தாமிரபரணியை பற்றி பேச ஆரம்பித்தால் காணி இன மக்கள் குறித்து பேசாமல் இருக்கவே முடியவில்லை.
என்னுடைய “தலைத்தாமிரபரணி” நூலில் காணி இனத்தை பற்றி விரிவாக எழுதாவிட்டாலும் அவர்கள் பண்ட மாற்று முறையில் இருந்து எப்படி தங்கள் முறையை மாற்றி நாணய மாற்றத்துக்கு மாறினார்கள். அதன் பின் கந்து வட்டியில் அவர்கள் சிக்கி கொண்ட வரலாறு: அவர்களை காப்பாற்ற தொண்டு நிறுவனத்தினர் எடுத்த முயற்சி: என வித்தியாசமான கண்ணோட்டத்துடன எழுதியிருப்பேன்.
அதன் பின் எனது “சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை” புத்தகத்தில் வசந்த தொலைக்காட்சிக்காக நான் சேகரித்த அதிகமான தகவல்களை குறிப்பிட்டு இருப்பேன். எனது “தவழ்ந்து வரும் தாமிரபரணி” நூலில் காணி இனத்தவர்களை பற்றி விரிவாக குறிப்பிட்டு இருப்பேன். தற்போது இந்த தொடரில் காணி இனமக்களை பற்றி பேசாமல் இருக்க இயலவில்லை. காரணம் காணிகள் பற்றி எடுக்கப்பட்ட குறும் படம். பொருநை என்றாலே அங்கு காணி இன மக்களை விட்டு விட இயலாது.
தற்போது நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக எடுக்கப்பட்ட காணிகள் குறும் படம் பாகம் இரண்டு: அவர்களது திருவிழாக்கள் மற்றும் சடங்குகளை காட்சிபடுத்தியிருந்தார்கள். அவற்றை பற்றி காண்போம்.
அந்த வீடியோவில் காணி இன மக்கள் இயற்கையோடு இயற்கையாக இணைந்து சடங்குகள் செய்யும் முறை சிறப்பாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. கலாச்சாரம் மரபு மாறாமல் அவர்கள் செய்யும் செயல் நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் ஆண்டு தோறும் கொண்டாடும் திருவிழா அறுவடை திருவிழா. இந்த திருவிழாவை மிகச்சிறப்பாகவே கொண்டாடுகிறார்கள். இவர்களின் வழிபாட்டு தெய்வமான கருமாண்டி அம்மன் மற்றும் தங்களது முன்னோர்களுக்கு பூஜை செய்து கொண்டாடுகிறார்கள்.
காணி இனமக்கள் தங்களது பராம்பரிய உடையில் ஆடிப்பாடி தங்களது தெய்வங்களை வணங்குகிறார்கள். “ஆகா. நான் என்ன செய்வேன்” என்ற அவர்களின் பாடல் தற்போது பட்டித்தொட்டிகளிலெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இந்த குறும்படம்தான். தும்பி துள்ளல், கோணம் துள்ளல், பேரையன் துள்ளல் என்ற அவர்களது பராம்பரியம் நம்மை கவருவதாக உள்ளது. திருவிழா கொண்டாட்டத்திற்காக மிக உயரமான மரத்தினை ஆற்றில் இழுத்து வந்து அதை நட்டு அதன் மீது கட்ட பட்ட பரிசு பொருளை வலுக்குமரமாக ஏறி எடுக்கும் வாலிபர்கள் நம்மை கவர்திழு க்கிறார்கள். பெண்கள் கயிறு இழுத்து விளையாடுகிறார்கள். அதை கயிறு என்று கூற முடியாது. ஒரு வகையான மரக்கம்பு போலவே தோன்றுகிறது.
இதில் களரி அடிமுறை சிலம்பாட்டம் என வாலிபர் முதல் முதியோர் வரை விளையாடும் ஆதி அடிமுறையான களரி விளையாட்டுக்கும் தங்களுக்கும் உள்ள உறவை புதுப்பிக்கிறார்கள்.
அகத்தியர் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய களறி விளையாட்டை இவர்கள் பயன்படுத்துவதால் அகத்தியர் காலத்திலேயே வாழ்ந்த பழங்குடியினர் காணி இன மக்கள் என நிருபணம் செய்கிறார்கள்.
மலைதெய்வத்துக்கு சாற்றுப்பாட்டு பாடும் போது கொக்கரை என்னும் இசை இசைத்து நம்மை யெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறார்கள். இதை கொடுதி சாற்று என்று கூறி இரவு முழுவதும் இசைக்கிறார்கள்.
காணி இன மக்களிடம் குல தெய்வ வழிபாடு எனும் முன்னோர்கள் வழிபாடு உயிர்புடனே இருக்கிறது. அதை இந்த கணொளி மூலம் அறியமுடிகிறது.
சரி. காணி இன மக்களின் கோக்ரா இசை கருவி, காணிகள் முற்காலத்தில் அணிந்த மரஉரிஆடை நெல்லையில் ஒரிடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் எது தெரியுமா?
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


