தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆற்றில் (உப்பாத்து ஓடை) சிறப்பு திட்டத்தின்கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிறு பாலங்கள் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் ஆற்றில்(உப்பாத்து ஓடை) சிறப்பு திட்டத்தின்கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிறு பாலங்கள், உள்வாங்கிகள் கட்டுதல் மற்றும் புணரமைத்தல் மற்றும் பிற வெள்ளப் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று வீரநாயக்கன்தட்டில் துவக்கி வைத்து தெரிவித்ததாவது: கோரம்பள்ளம் ஆறு, உப்பார் ஓடை என்னும் பெயரில் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு, சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32 கி.மீ. தூரம் சென்று கோரம்பள்ளம் குளத்தினை வந்தடைகிறது.
பின்பு கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் சுமார் 12 கி.மீ. தூரம் சென்று தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு உப்பார் ஓடை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டியதால் உபரி நீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
திடீர் நீர்வரத்து காரணமாக கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாத்து ஓடை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டது. அனைத்து உடைப்புகளும் போர்க்கால் அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. இக்காட்டாற்று வெள்ளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப்பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம், சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம், வி.க.நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரப்பட்டி, வீரநாயகந்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளைநகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகள் காட்டாற்று வெள்ளம் புகுந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.
எனவே இப்பகுதிகளில் வருங்காலத்தில் காட்டாற்று வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு திட்டமாக கோரம்பள்ளம் ஆற்றில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சிறு பாலங்கள், உள்வாங்கிகள் கட்டுதல் மற்றும் புணரமைத்தல் மற்றும் பிற வெள்ளப் பாதுகாப்பு பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் செயற்பொறியாளர் அ.வசந்தி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ரத்தினகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


