
ஜல்லிக்கட்டு மாடுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர். ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் மலையாண்டி ஜல்லிக்கட்டு மாட்டை தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்து வந்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரேகாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.