பாலக்காடு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம் ஆகிய இடங்களில் நிற்காமல் செல்கிறது. இதை கண்டித்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து சார்பாக பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் வருகிற 25 ந்தேதி ரயில் மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமை வகித்தர். பயிற்சி டி.எஸ்.பி சியாமளாதேவி முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், வார்டு உறுப்பினர் பட்டுராஜா, வியாபாரிகள் சங்க தலைவர் அய்யாக்குட்டி, துணைத்தலைவர் மந்திரம், பொருளாளர் பால்சாமி, தவ்கீத் ஜமாத்தை சேர்ந்த அப்துல் , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம் போலிசார் தரப்பில் பேசிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்று டி.எஸ்.பி வெங்கடேஷ் கூறினார். மறியல் செய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே மறியல் போராட்டத்தினை கைவிடவேண்டும் என்று டி.எஸ்.பி வெங்கடேஷ் கேட்டுக்கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்ட படி வருகிற 25 ந்தேதி செய்துங்கநல்லூர் தபால் நிலையம் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஒப்புக்கொண்டனர். அதற்கு காவல் துறை அனுமதியும், பாதுகாப்பும் தர கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் கூறும் போது, காவல் துறையினர் எங்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் மறியல் போராட்டத்தினை கைவிடும் படி கேட்டனர். நாங்களும் ஒத்துக்கொண்டோம். ஆனாலும் ரயில்வே துறை செய்துங்கநல்லூரை திட்டமிட்டே புறக்கணிக்கிறார்கள். எனவே எங்கள் போராட்டம் வேறு மாதிரி தொடருகிறது. வருகிற 25 ந்தேதி காலை 10 மணிக்கு செய்துங்கநல்லூர் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம். அப்போதும் ரயிலை நிறுத்த வில்லை என்றால் பிப்பரவரி 1 ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம். தொடர்ந்து ரயிலை நிறுத்தவில்லையென்றால் அடுத்த பிப்ரவரி 8 ந்தேதி தபால் அலுவலகத்தினை முற்றுகை இடும் போராட்டம் நடைபெறும். தொடர்ந்து ரயிலையை செய்துங்கநல்லூர் ,ஸ்ரீவைகுண்டம், தாதன்குளத்தில் நிறுத்தவில்லை என்றால் பிப்ரவரி 15 முதல் தினமும் ஐந்து பேர் தொடர் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் செய்துங்கநல்லூரில் ரயிலை நிறுத்தவில்லையென்றால் அரசு அனுமதி பெற்று ரயில் மறியல் செய்யப்போகிறோம். எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், தாதன்குளத்தில் பாலக்காடு ரயில் நிற்காவிடில் தொடர் பேராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


