இந்த கட்டுரையை படிக்க தவறாமல் ஞாயிறுதோறும் , நெல்லை டைம்ஸ் நாளிதழை வாங்கி பயன்பெறுங்கள். கட்டுரையை மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் திரு. தம்பான் மற்றும் ஆசிரியர் குழு, நிர்வாகிகளுக்கு நன்றி நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்களை தேடி பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாம் தாமிரபரணியின் துணை நதியான மணிமுத்தாறு நதியில் தலையருவியை நோக்கி உயிரை பணயம் வைத்து பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
அழகாய் இருக்கிறது ஒரு புறம். மறு புறம் ஆபத்தும் காத்திருக்கிறது. நாம் கொண்டு வந்த கிடாய் வாசத்துக்கு புலி வந்து விடும் என்பதனால் அனைவருக்கும் கிலி பிடித்துக்கொண்டது. ஆனாலும் தளராமல் நடந்தோம்.
தாழ்வாரத்தில் இருந்து மேலே ஏறும் போது கிடாய் வேகமாக ஓடியது. அதை பிடித்துக்கொண்டுச்சென்றவர்களும் ஓடினார்கள். ஆனால் எங்களால் ஏற முடியவில்லை. மிக கடினமாக இருந்தது. சரியான முட்டு ஏத்தம் ஏறும் போது கதிர் டிவி அதிபர் அண்ணன் முத்தமிழ் அவர்களின் கால் சுளுக்கி கொண்டது எனவே அவரால் நடக்க முடியவில்லை. அம்மாடியோவ் என ஒரு பாறை மீது அமர்ந்துவிட்டார். அவரையும் கையோடு சேர்த்து இழுத்துக்கொண்டு கிளம்பினோம். வலி தாங்க முடியாமல் இருந்தாலும் மனதைரியத்தினை அவர் கைவிடவில்லை. இறுதியில் ஏத்தம் ஏறி மிக மேடான ஒரு பகுதிக்கு வந்து சேர்ந்தோம். எங்கோ அருவி விழும் சத்தம் கேட்கிறது. ஆர்பரித்துக்கொட்டும் அந்த அருவி அருகில் தான் இருக்கிறது. ஆனால் கண்ணுக்கு தெரியவில்லை. உடன் வந்த சிஷ்யன் சுடலைமணிசெல்வனும், தம்பி ஆறுமுகப்பெருமாளும் அருவியை தேடினார்கள். யார் முதலில் அருவியை பார்பது என அவர்களுக்குள் போட்டி. பேரப்பிள்ளை காளிமுத்துவும் அருவி சத்தம் கேட்ட இடத்தினை நோக்கி ஓடினார். சிறிது தூரத்தில் செடி கொடிகளுக்கு இடையே பார்த்த போது அங்கே அருவி மிகப்பிரமாண்டமாக தெரிந்தது. என்ன அழகு. ஆகா இதுவரை பட்ட வலிகள் எல்லாம் பஞ்சாய் பறந்துவிட்டது. ‘நாம் சொர்க்கலோகத்தில் நிற்கிறமோ.’ என எண்ணும் அளவுக்கு, மிக அழகான இடத்தில் நின்று கொண்டிருந்தோம். அருகில் நம்மை சொக்க வைக்கும் தலையருவி.
அருவியை பார்த்தவுடன் முத்தமிழ் அண்ணனும் உற்சாகமாக எழுந்துவிட்டார். இதற்கிடையில் பாதை தவறி சென்றவர்களும் பூஜை பொருள்களுடன் வந்து சேர்ந்தனர்.
மணிமுத்தாறு தலையருவி சுமார் 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து கொண்டிருந்தது. இந்த அருவி விழும் இடத்தில் கசம் சுமார் 800 அடி ஆழம் கொண்டது. இதில் விழுந்தால் அதோ கதிதான். நெல்லை மாவட்டத்தில் மிக உயரமான அருவி இதுதான். ஆனால் எல்லோரும் பார்த்திருக்காத அற்புத அருவி. நமக்கெல்லாம் மணிமுத்தாறு அருவி என்றால் அணை அருகில் உள்ள அருவிதான்தெரியும். ஆனால் இந்த தலையருவியை யாரும் பார்த்திருக்க முடியாது. ஆகவே தான் இந்த பக்கத்தில் அந்த அருவி படத்தினை வெளியிட்டு இருக்கிறோம். ஆபத்தான இந்த அருவியின் கீழே சப்தகன்னிகளை வரவழைக்க 20 அர்ச்சகர்கள் தொடர்ந்து பூஜை நடத்தி கொண்டிருந்தனர். சப்த கன்னிகளை மலர்களால் வடிவமைத்து அவர்களுக்கு, ஏழு வண்ணத்தில் துணி உடுத்தி பல்வேறு ஆராதனைகள் செய்தனர். சப்தகன்னிகள் வரவழைக்க சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது.
அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு குரல் மலை முகட்டில் ஒலித்து திரும்பியது. அவர்களின் பூஜையில் இருந்து கம கம என மணம் வந்து கடவுளார்களை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தது. ஆனாலும் சப்தகன்னிகளை வரவழைக்க விசித்திரமான பூஜை ஒன்றை அங்குத் தொடர்ந்து செய்தார்கள்.
ஆம். நாம் ஊரில் இருந்து அழைத்து வந்த இரண்டு கிடாயில் ஒன்றின் தலை அறுக்கப்பட்டது. அந்த கிடாய் ரத்தம் முழுவதும் பாறையில் விழும் படி செய்யப்பட்டது. அதன் பின் அந்த கிடாய் ரத்தத்தினைப் பாறை முழுவதும் தேய்த்து பாறையை அசிங்கப்படுத்தினர். இது என்னடா இதுவரை மணமாய் நடந்த பூஜை தீடீரென இப்படி மாறிவிட்டது. சைவ சாமி நொடியில் அசைவ சாமியாகிவிட்டாரே என நாங்கள் எண்ணினோம்.
இதற்கான காரணமும் சிங்கம்பட்டி ஜமீன்தாரின் நேர்முக உதவியாளர் கிட்டு அய்யா மூலமாக எனக்கு முன்பே கூறப்பட்டிருந்தது. இந்த இடம் சப்த கன்னிகள் குளிக்க வரும் இடமாகக் கருதப்படுகிறது. இந்தப் பாறையில் தான் அவர்கள் தங்குவார்கள். தற்போது ரத்தம் தோய்ந்த இந்த இடத்தினை அவர்கள் பார்த்தவுடன் ரத்தமாக இருக்கிறதே என வர்ணபகவானை வரவழைத்து மழை பெய்து அதை கழுவி விடுவார்களாம். இதுதான் இந்த பூஜையின் ஐதீகம் என்று கூறியிருந்தார். கண்டிப்பாக பூஜை முடிந்தவுடனே மழை பொழியும் என பயணத்தினை மேற்கொள்ளும் போதே கட்டபொம்மன் அய்யா கூறியிருந்தார்.
எப்போதுமே இந்தப் பூஜை நடந்த பிறகு இரவு தான் மழை பெய்யுமாம். ஆனால் நாங்கள் சென்றிருந்த போது பூஜை நடக்கும் போதே மழைபெய்ய ஆரம்பித்து விட்டது. கொட்டும் மழையில் அந்த குழுவின் தலைவர், பூஜையின் உச்சகட்டமாக அறுத்த கிடா தலையை ஒரு உலை மூடியில் எடுத்து அதை படையலாக, பூ உள்பட பூஜை பொருள்களை வைத்து அருவி கசத்தில் விட்டார். அவர் கசத்தில் விழுந்து விடக்கூடாது என அவரின் இடுப்பில் துண்டை கட்டி அவரை கசத்தில் இறக்கினர்.
உயிரை பணயம் வைத்து அந்த பூஜையின் இறுதி கட்டம் நடந்து கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் பாறையெல்லாம் வழுக்கி கொண்டிருந்தது. ஆனாலும் அசராமல் அந்த பணியை செய்தார் கட்டபொம்மன் அய்யா. அதன் பின் கொட்டும் மழையில் பக்தர்கள் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் அடிவாரத்தில் உள்ள தாழ்வாரத்தில் இரவு முழுவதும் அமர்ந்தனர். நாங்களும் அமர்ந்து கொண்டோம்.
தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்த காரணத்தினால் வெள்ளம் வந்து விடும் என்ற பயம் இருந்தது. எனவே பக்தர்களை கண்காணித்து கொண்டே இருந்தனர். யாரும் தூங்க முடியவில்லை. ஆனால் இரவு ஆக ஆக மழையின் வேகம் குறைந்தது. இந்த வேளையில் தான் உணவுக்கு உப்பு கொண்டு வரவில்லை என்ற தகவல் குழுவினருக்கு கிடைத்தது. உடனே இரண்டு வாலிபர்கள் இராவோடு ராவாக அங்கிருந்து காட்டு வழியாக மாஞ்சோலைக்கு கிளம்பினர். மீண்டும் அனைவர் மனதிலும் திக் திக் என இருந்தது. கூ இருட்டு, பாதைவேறு சரி கிடையாது. இவர்கள் போய் விட்டு எப்படி வருவார்கள். சுமார் 3 மணி நேரம் கழித்து சென்ற வாலிபர்கள் உப்போடு வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிகாலையில் வெட்டப்பட்ட கிடாய் கறி சாப்பாடும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன் பின் அனைவரும் கீழே இறங்கினார்கள். தலையணை அருகே அனைவருக்கும் மலை ஏற்றத்துக்குப் பயன்படுத்திய கம்புகளை யெல்லாம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனத்தில் இருந்து சப்த கன்னிகளின் அருளை மட்டுமே கீழே கொண்டு வர முடிந்தது. அதுபோலவே வருணபகவான் அருளால் , சப்த கன்னிகள் வேண்டு கோளால் மழை பெய்து புது தண்ணீர் மணிமுத்தாறு அணையில் வந்து சேர்ந்து கொண்டிருந்தது.
இதுவரை நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என பூஜை நடத்திய சிங்கம்பட்டி ஜமீனின் தலைமை காவலர் கட்டபொம்மன் தற்போதும் என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
இதில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால் நாங்கள் வனத்துக்குள் சென்று வந்த செய்தி மறுநாள் பிரபல டிவியில் ஒளிபரப்பானது. இதனால் வனத்துறையினர் கட்டபொம்மன் தலைமையிலான அந்த குழுவினருக்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்தனர்.
பணத்தினை கட்டிவிட்டனர். அதன் பிறகு ஐந்து வருடத்தினை கடந்து விட்டது அங்கு யாரும் செல்லவும் இல்லை. பூஜை நடக்கவும் இல்லை.
மணிமுத்தாற்றில் மட்டுமா இந்த பூஜை நடைபெறுகிறது. தாமிரபரணியின் மற்றொரு துணை நதியான சிற்றாறு தோன்றும் குற்றாலம் மழையிலும் இதுபோன்ற ஒரு பூஜை நடைபெறுகிறது. அந்த பூஜையும் மிகச்சிறப்பானது தான்.
31.05.2019 அன்று குற்றாலத்தின் மேலே நடந்த அத்ரி அகத்தியர் தேரையர் பூஜைக்கு நானும் சென்று இருந்தேன். அந்த பூஜைக்கும் எளிதாக வனத்துறை அனுமதி தராது. வருடந்தோறும் ஒரு தடவை மட்டுமே அனுமதி உண்டு.
தமிழகத்துக்கு மேற்குதொடர்ச்சி மலை பெரிய வனப்பு. இந்த மலையில் தோன்றும் ஒவ்வொரு நதியும் தமிழக மக்கள் வளத்திற்கு மிக முக்கிய பங்கு. எனவே தான் விவசாயத்தினை நம்பியே மக்கள் தங்களது வாழ்வியலை கொண்டாடுகிறார்கள். ஆனால் வானம்பொய்த்து விட்டால், பூமியும் வறண்டு விடும். அந்த வேளையில் நமக்க மிகவும் கைகொடுப்பது இறைவழிபாடுதான். அதுவும் தம்மை தாமே வறுத்தி ஒரு பயணத்தினை கரடு முரடாய், ஆற்றங்கரையில் , மலை முகட்டில், மிருகங்கள் நடமாடும் வனப்பகுதியில சென்று நடத்துவது என்பது சாதரணமான நிகழ்வா?. இதுபோன்ற மற்றொரு பூஜைதான் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெறுகிறது. குற்றால மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு , தங்களுடைய பங்காய் பழங்கள் உள்பட பூஜை பொருள்களை சேகரித்துக்கொண்டு கடுமையான மலை பயணத்துக்கு தயாராகி விடுவார்கள். இந்த பயணம் குற்றாலம் மலையின் உச்சியில் உள்ள தெற்கு மலை எஸ்டேட் ஆன்மிக பயணம் என அழைக்கப்படுகிறது. நினைத்தநேரத்தில் இந்த பயணத்தினை மேற்கொள்ள முடியாது. ஏன் என்றால் வனத்துறை மிக சுலபமாக அனுமதி தந்துவிடாது. எனவே வருடத்துக்கு ஒரு நாள் வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த பயணத்தினை தொடர முடியும். இதனால் மழை வேண்டி பூஜை செய்ய வனத்துறை அனுமதி பெற்று கிராம மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
சிற்றாறு, மலை முகட்டில் ஓடி வரும் கரை வழியேதான் இந்த பயணம் செல்கிறது. பல இடங்களில் இந்த நதியில் இறங்கி -ஏறி மறுகரை சென்று , வளைந்து நெளிந்து பள்ளதாக்கில் பயந்து ஏறி சென்றுதான் பூஜை செய்கிறார்கள்.
அந்த அபூர்வ பூஜையில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கிறது. தொடர்ந்து காணலாம்.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


