சிதம்பரனரின் தீவிர தேசியத்தின் தாக்கம், காந்திஜியின் அகிம்சையின் தாக்கம், காந்திஜி மீதான அமிமானம் இவற்றின் தூண்டுதலால் செயலாற்றிய விடுதலை வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர் தூத்துக்குடியின் மேதை எம். சி. வீரபாகு அவர்கள்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக அரசியலமைப்புச்சட்டம் இறுதி வடிவம் 1946-86 பெற்றபின் தமிழில் கையெழுத்திட்டுத் தமிழுக்குப்பெருமைச் சேர்த்த உறுப்பினர் ஆவார். 1903 -இல் பிறந்த எம்.சி.வீரபாகு 1929 முதல் தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். வ.உசிதம்பரனாரின் உறவினரான இவர் காங்கிரஸின் தீவிர உறுப்பினரானார். 1934-இல் ஜில்லா காங்கிரஸ் கமிட்டித்தலைவரான பின் வக்கீல் தொழிலை நிறுத்திக் கொண்டார். 1935-இல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விடுதலை வேட்கையைப் பரப்பினார் டிசம்பர்,1938- இல் ஜில்லா போர்டு தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1934.இல் தூத்துக்குடியின் கடற்கரையோரம் இவர் கட்டிய “சிதம்பர விலாஸ்” என்ற இல்லம் அந்தக் காலத்திலேயே ஒரு சமத்துவபுரமாக விளங்கியது. காந்திஜி வருகை தந்தபோது இந்த இல்லத்தில் சமபந்தி விருந்து அளித்தார். இந்த இல்லத்தில் காந்திஜி நிகழ்த்திய பேருரை சிறப்புப்பெற்றதாகும். அரசியலில் ஈடுபடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய காந்திஜியின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். தூத்துக்குடிக்குக் காந்திஜி 1934&இல் இரண்டாம் முறையாக வந்தபோது கடற்கரையில் பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முப்பதினாயிரம் மக்கள் திரண்டடிருந்தனர். சிதம்பர விலாசிலிருந்து கடற்கரை வரை போடப்பட்டிருந்த விளக்குகளைப் பார்த்தவுடன், மேடையில் அமர்ந்த காந்திஜி, “இவ்வளவு விளக்கு அலங்காரம், ஏழை மக்களிடம் வசூல் செய்யப்பட்டதா? இதற்கு விடை தெரியும் வரை கூட்டத்தை ஆரம்பிக்க இயலாது” என்று கூறிவிட்டார். மின்சார ஒப்பந்தக்காரர்களின் நாட்டுப்பற்றுக் காரணமாக இலவசமாகச் செய்த உபயம் என்று சொன்னபிறகு தான் கூட்டம் ஆரம்பித்தது. ஆனால் இரவு விடாப்பிடியாக அதற்கான வரவு-செலவு கணக்கு நகலை வாங்கிப் பார்த்த காந்திஜி வசூலான ரூ.2600 இல் ரூ.500 செலவழித்ததைக் கண்டித்தார். ஐந்தில் ஒரு பாகம் செலவிடுவது நியாயமில்லை. இருபதில் ஒரு பாகம் மிகைபடாது செலவுகள் செய்ய வேண்டும் என்று கூறி “கூட்டம் எப்படி அமைய வேண்டும்’ என்ற உரையையும் சிதம்பர விலாசில் அன்றிரவே நிகழ்த்தினார். எம்.சி.வீரபாகு பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தின் முதல் ஜில்லா போர்டு தலைவராய் இருந்தபோது சாலைப் போக்குவரத்தை முறைப்படுத்தினார். முறப்பநாடு பாலம் மற்றும் பல பாலங்கள் மூலம் பல ஊர்கள் இணைக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதல் நியமனப் பாராளுமன்ற உறுப்பினராய்ப் பதவி வகித்தார். பாராளுமன்றத்தின் பல குழுக்களிலும் செயலாற்றினார். 1948-இல் மூதறிஞர் இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது வ.உ.சி. கப்பல் கம்பெனியை மீண்டும் செயல்பட வைத்தது குறிப்பிடத்தக்கதாகும். தூத்துக்குடி துறைமுகத்திட்டவளர்ச்சி குழவில் அங்கத்தினராகச் செயல்பட்டார், Air Steamer and Control Agencics என்ற முறையில் விமானப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று இவர் அமைத்த அடித்தளம்தான் பின்னாளில் வாகைக்குளம் விமானத்தளம் தோன்ற காரணமாகும். இராஜாஜி மற்றும் பிரதமர் நேருஜியுடன் இணைந்து இவர் ஏற்படுத்திய தொலைநோக்குத் திட்டங்கள்தான் தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு அடிப்படைகளாக அமைந்தன்.
எம்.சி.வீரபாகுவின் முயற்சியால்தான் நாடு முழுவதும் தியாகிகளுக்குத் தாமிரப்பட்டயம் வழங்கப்பட்டுத் தியாகி ஓய்வூதியமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தமது, “தேசப்பணி இன்னமும் நிறைவுப்பெறவில்லை” என்று சொல்லி, தாமிரப்பட்டயத்தைப் பெற்றுக் கொள்ள இவர் மறுத்துவிட்டார்.
கோவில்பட்டியில் அன்னிய நாட்டவரின் பஞ்சாலையால் சுதேசி பஞ்சாலை தொடங்கப்படாமல் இருந்தது. இவரது தளரா முயற்சியின் காரணமாகத்தான் “லெட்சுமி மில்” ஏற்படுத்தப்பட்டது. வினோபாவின் பூமிதான இயக்கம் பரவிக் கொண்டிருந்தபோது, துப்பாசுபட்டியில் தம் குடும்பத்திற்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை நிலமற்றவர்களுக்கு வழங்கிய முன்னோடி இவர். இராஜாஜியின் நெருங்கிய நண்பரான இவர் 15:4.1976இல் மறைந்தார். இன்றும் தூத்துக்குடியில் வீரபாகு அவர்களின் பெயர்பல இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


