குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “குமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல் நிலை திருக்குறள் வினாடி வினாப் போட்டியானது 21.12.2024 அன்று பிற்பகல் 2 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கலந்து கொள்ளலாம். சார்ந்த துறை அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்வதற்கான இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவ்விணைப்புகளைப் பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும். பதிவுகளுக்கான கடைசி தேதி – 20.12.2024 மாலை 5.00 மணி.
மேலும், பதிவுகளில் ஏதாவது இடர்பாடோ, சந்தேகமோ வருமாயின் கீழ்கண்ட ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. முதன்மைக்கல்வி அலுவலர், தூத்துக்குடி – 7373003031
2. நேர்முக உதவியாளர், (முதன்மைக்கல்வி அலுவலர்) – 8072762257
3. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – 9788859169
4. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – 9942990027
இப்போட்டியானது, தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை (ஆ) மேல்நிலைப் பள்ளி (வ.உ.சி. கல்லூரி எதிரில்) நடைபெறும். தேர்வு மையத்திற்கு 21. 12. 2024 பிற்பகல் ஒரு மணி அளவில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் துறை அடையாள அட்டையுடன் வருகை புரிய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்கள் (3×3=9பேர்) தேர்வு செய்யப்பட்டு, 38 மாவட்டங்களை சேர்ந்த குழுக்கள் கலந்து கொள்ளும் இறுதிப் போட்டியானது விருதுநகரில் 28.12.2024 அன்று நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முதல் குழுவிற்கு ரூபாய் 2 இலட்சமும், இரண்டாவது குழுவிற்கு ரூபாய் 1.5 இலட்சமும், மூன்றாவது குழுவிற்கு ரூ.1 இலட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. மேலும், இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற இதர மூன்று குழுக்களுக்கு பரிசாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


