செய்துங்கநல்லூரில் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் இணைந்து செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஒன்றிய அளவிலான 15 அம்ச கோரிக்ககளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கருங்குளம் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய இணைச்செயலாளர் சங்கரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இசக்கிமுத்து வரவேற்புரை ஆற்றினார். அனைத்து பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் பெருமாள், ஒன்றிய தலைவர் இசக்கி, ஊராட்சி செயலாளர்கள் சோமு, மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் முருகன் கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசினர். ஊராட்சி செயலர் பாலாஜி நன்றி கூறினார்.
காலியாகும் ஊராட்சி செயலர் பணியிடங்களை டிஎன்பிஎஸ் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கவும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 10 ஆயிரமாக உயரத்தி அதனை அரசு கருவூலத்தில் வழங்கவும், தற்காலிக கணினி விரிவுரையாளராக பணியாற்றி வருவோரை பணி நிரந்தரப்படுத்தவும், கொரோனா பேரிடரில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த 15 ஆயிரம் ஊக்கத்தொகை உடனே வழங்க வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி செயலாளர்கள், அனைத்து பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதார சிப்பந்திகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


