தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தெரிவித்ததாவது: தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க, வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நமது மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை (20.09.2021) முதல் ஞாயிற்றுக்கிழமை (27.09.2021) வரை 7 நாட்களுக்கு தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள குளங்கள், நீர்நிலைகள், கால்வாய்களில் தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக சீமை கரு வேல மரங்கள் அதிகம் நிறைந்துள்ள குளங்களை முன்னுரிமை அடிப்படையில் தூர்வாரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை புகைப்படம் எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் மழை வெள்ள காலங்களில் நீர்நிலைகள் உடைந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாத்தியப்பட்ட சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் பொது சமையலறையாகவும் தற்காலிக நிவாரண மையங்களாக செயல்படும் வகையில் அதில் ஏதேனும் பழுதுகள் இருப்பின் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ள பாதிப்பு காலங்களில் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிக முகாம்களில் போதிய அளவு கழிப்பறை அமைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர், பள்ளிக்கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பிடங்கள் போன்ற பொதுக்கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்து சேதங்கள் இருப்பின் சரி செய்ய வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், கனமழை / வெள்ள காலங்களில் குடிநீர் திட்டங்களில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். உப்பாறு ஓடையில் வெள்ளநீர் தடையின்றி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய மணல் மூட்டைகள் தேவையான அளவு இருப்பு வைத்திட வேண்டும். நுகர்பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் போதுமான அளவு உணவு தானியங்கள், மண்ணெண்ணெய், சாக்குப்பைகள் ஆகியவைகள் இருப்பு வைக்க வேண்டும். தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கிடும் பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், சேதமடைந்துள்ள கம்பங்களை உடன் மாற்றி அனைத்து, அவசரகாலங்களில் மின்இணைப்பினைத் துண்டித்திடவும், சரிசெய்து உடன் மறுஇணைப்புக் கொடுத்திடும் வகையிலும் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர், புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் சாயும் மரம் மற்றும் மின் கம்பங்களை உடனுக்குடன் அகற்றிட குழுக்கள் அமைத்து பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சுகாதாரத்துறையினர், அத்தியாவசியமான மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் ஆகியவற்றினை கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும். போதுமான அளவு மருந்துகள் இருப்பு இருக்கிறதா என உறுதி செய்து தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நடமாடும் (ஆழடிடைந) மருத்துவக்குழுக்கள் நியமனம் செய்து பட்டியல் அளிக்க வேண்டும். வெள்ள பாதிப்பினால் தொற்று நோய் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மீன்வளத்துறையினர், புயல் தொடர்பாக வரப்பெறும் மீனவர்களுக்கான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். புயல் காலங்களில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றவர்கள் விவரங்களை சேகரித்து திரும்பி வந்து விட்டார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். கடலுக்குள் சென்றவர்கள் எவரேனும் திரும்பி வராமல் இருந்தால் அவர்களின் விவரங்களை கடலோர காவல் படைக்கு வழங்கி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டு;ம். மீட்பு பணிகளுக்கு தேவையான தன்னார்வலர்கள்(நீச்சல் வீரர்கள்), படகுகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தீயணைப்புத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய் துறையினரை கலந்தாலோசித்து பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடத்திட வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையினர் போதுமான அளவு கால்நடைகளுக்கான எதிர் உயிரிகள், மருந்துகள் அனைத்து கால்நடை மருத்துவமனைகளில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினர் அரசு பேருந்துகள் அனைத்தும் பழுது நீக்கி நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் மழைக்காலங்களில் தொலைத்தொடர்பு இணைப்புகள் பழுதாகும் போது அதை உடனுக்குடன் சரிசெய்ய ஏதுவாக பணியாளர்களை தயார் நிலையில் வைத்து சரிசெய்திட வேண்டும். தற்காலிக முகாம்களுக்கு மக்களை கொண்டு வரும் சாலை மற்றும் தற்காலிக முகாம்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் சாலை ஆகியவற்றின் போக்குவரத்தினை இலகுவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படக் கூடும் என மழையினால் பாதிக்கப்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளையும் ஆய்வு செய்து, மக்கள் தங்கும் புகலிடங்களுக்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்திட வேண்டும். வருவாய் துறையினர் கோட்ட அளவிலான அவசர கால நிவாரண குழு கூட்டத்தினை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தி அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். எனவே மீதமுள்ள விடுபட்ட அனைவரும் தடுப்பூசி போடுவதற்காக நாளையும் (19.09.2021) பல்வேறு இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர், பொதுப்பணித்துறையினர் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


