
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்கள் ஆவர். இந்த நிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு என்றால் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையையே அணுகி வருகிறார்கள்.
இந்த நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள், உதவியாளர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மருத்துவ தேவைகளுக்காக அதிகாலை முதலே மணிக்கணக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருவதாகவும், போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கும் இடத்தில் எவரும் இல்லாத காரணத்தினால் டோக்கன் வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசல் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமர்ந்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.