
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்சீலன் என்ற சிங்கம்(45). இவர் அகரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்தார். அகரம் கிராமத்தில் நேற்றைய தினம் கோவில் கொடை விழா என்பதால் துணைத்தலைவர் தவசிகனி வீட்டிற்கு கறி விருந்து சாப்பிட இன்று காலை 11 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அரிவாளால், பஞ்சாயத்து துணைத்தலைவர் வீட்டு வாசல் முன்பு சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதில் பஞ்சாயத்து தலைவர் பொன்சீலன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான ஏரல் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்சீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜூனோ என்ற மோப்பநாய் மூலம் குற்றவாளிகளை தேடி ஊரின் எல்லை வரை சென்று திரும்பியது. இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த லெனின் என்பரை பொன்சீலன் உள்பட 14 பேர் வெட்டிக்கொலை செய்தனர். அந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பொன்சீலன். எனவே லெனின் உறவினர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது தொடர்பாக லெனின் தம்பிகளான ரூபன், ஜெகன் மற்றும் அவர்களின் நண்பர்கள் ஜெபசிங், ஜெபஸ்டின் ஆகிய 4 பேரை திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி போலிசார் சோதனைச்சாவடியில் கைது செய்தனர்.
குற்றவாளிகள் 4 பேரை 2 மணி நேரத்தில் கைது செய்த போலிசாரை கிராமமக்கள் பாராட்டினர்.
பழிக்குப்பழியாக பஞ்சாயத்து தலைவர் பட்டப்பகலில் துணைத்தலைவர் வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.