முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தீதும் நன்றே – நாவல் விமர்சனம் – எழுத்தாளர் தானப்பன்
வணக்கம் ஸ்ரீவை
August 18, 2024

கொரோனா காலம் நம்மை முடக்கிப் போட்டு இருந்தது. கொரோனா கால முடக்கம் நிறைய சிறுகதை எழுத்தாளர்களை, நாவலாசிரியர்களை அதிகமாக படைப்புகளை படைக்க தூண்டியது. இப்படி கொரோனா கால முடக்க நிகழ்வை நாவலாக்கி நமக்கு தந்திருக்கின்றார் முத்தாலங்குறிச்சி காமராசு. ஒரு கதைக்கான வித்தை எதிலிருந்தும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான சான்று இந்த நாவல். ஆசிரியருடைய மருமகன் கொரோன காலகட்டத்தில் மூன்று முறை மும்பையில் இருந்து நிலைக்கு வந்து சென்றது மற்றும் நாட்டார்குளம் திருப்பதி அவர்களிடம் கேட்ட கடந்த கால கதைகள் இவற்றை ஒருங்கிணைத்து ‘தீதும் நன்றே’ என்னும் நாவலாக்கி இருக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு. முத்துக்கிளிதான் இந்த நாவலின் கதாநாயகி. இவருடைய நாவல்களில் முத்துக்கிளிதான் எப்போதுமே கதாநாயகி. அவளுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நூலாக தந்திருப்பதாக முன்னுரை தந்திருக்கின்றார். முத்துக்கிளியை கதாநாயகியாகக் கொண்டு எழுதிய இரண்டாவது நாவல் இது. அவரது முதலாவது நாவலையும் தேடி வாசிக்கத் தூண்டுகிறது. கொரோனா எனும் பொல்லாத காலத்தில் நாம் தலைமுறையினர் அனுபவித்த கொடுமைகளை காட்சிமைப்படுத்தியிருக்கின்றார். இந்த நாவலில் முத்துக்கிளி பம்பாயில் இருக்கிறார். அவள் ஒரு அப்பாவி. பாசத்துக்கு ஏங்குபவள். தாய்ப்பாசத்துக்காக மற்றொரு தாய் தந்தையுடன் மும்பைக்கு சென்றவள் அங்கே நடந்த பாசப் போராட்டத்தில் அவளது பாசப் பெற்றோர் இவளை மயக்கமடையவும் கடத்தவும் முயற்சிக்கிறார்கள். இறுதியில் அவளைக் கண்டுபிடித்து போலீஸ் மூலம் மீட்கிறார்கள். அதற்கு இளைஞன் ஒருவன் உதவுகிறான். அந்த இளைஞன் யார்? அந்த இளைஞனுக்கும் முத்துக்கிளிக்கும் என்ன தொடர்பு? இதை இந்த நாவல் மூலம் அவர் தருகிறார். தொற்றுக்காலத்தில் மும்பையில் இருந்து நெல்லைக்கு, தனது சொந்த ஊருக்கு வரும் அனுபவங்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள், தனிமைப்படுத்தப்படுதல், வரும் போதும் தனிமைப்படுத்தப்படும் போதும் அவர்களுக்குள்ளே நடைபெறுகின்ற உரையாடல்கள், கதை ஆகியவை இந்த நாவலை அழகாக கடத்திச் செல்கிறது. அவர்களுக்குள்ளே நடைபெறும் உரையாடல் என்ன என்பதை அதிகமாக கதை சொல்லல் போல அவர்களுக்குள்ளே நடைபெறுகின்ற தன் ஊர் சடங்குகளை மீட்டெடுப்பது போல தந்திருக்கிறார்.


வண்ணான்துறை மோகினி, சீமான் மடக்கிய தென்னம் பாண்டி சாஸ்தா, கருவக்காட்டுக்கு தண்ணீர் வந்த வரலாறு, செப்புக்குடம் தூக்கி போறவளே, திருநெல்வேலி பாலம், கன்னி தெய்வ வழிபாடு, தாமிரபரணியை காக்க போராடிய தாத்தா, கோயில் கொடை, கணியன் கூத்தும் வரலாறும் இப்படி உட்கிளைகள் அல்ல அல்ல உட்கதைகள் அமைத்து நாவலை விறுவிறுப்புடன் கொண்டு சென்றிருக்கின்றார் முத்தாலங்குறிச்சி காமராசு. வரலாற்று ஆய்வாளரல்லவா! மணிமுத்தாறு அணை கட்டப்பட்ட வரலாறு இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாட்டார் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவரல்லவா! கன்னி தெய்வ வழிபாடும், கனியன் கூத்தின் வரலாறும் மிக மிக நேர்த்தியாக கிராமத்து கொடை வழிபாட்டினை, கிராமத்தை தெய்வங்களின் வழிபாட்டினை நமக்கு காட்சிமைப்படுத்தித் தந்திருக்கின்றார். சந்திரன் யார்? ரத்தினம் யார்? முத்துக்கிளி நிலைமை என்ன? இவற்றை தெரிந்து கொள்ள தீதும் நன்றே நாவலை வாசித்து விட்டால் அவர்களோடு நாம் மும்பையிலிருந்து நெல்லைக்கு பயணம் வந்த அனுபவம் பெறலாம். காதல் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது, ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ளும் காட்சிகள் அமைந்திருக்கிறது, புரியாது போன.அவல நிலையும் இருக்கிறது. இப்படி நேர்த்தியாக செதுக்கி தீதும் நன்றேவை நன்றே என்று நமக்கு கைகளில் தந்திருக்கின்றார் முத்தாலங்குறிச்சியார். “முன்னெல்லாம் களை பறிக்க நம்ம புள்ள போனா அங்கன சோறு, கஞ்சி சாப்பிடும் போது கவருல (வாய்க்கால் )போற தண்ணீரை ரெண்டு கையால கோரிக்குடிப்பாவ. இப்ப வீட்ல இருந்து பாட்டில் தண்ணீர் கொண்டு போய் குடிக்காவ. ஏன்னா யூரியா, காம்ப்ளக்ஸ், டிஏபி என உரத்தப் போட்டு, பூச்சி மருந்து அடிச்சு எல்லாத்தையும் விஷமா மாத்திட்டாவ” என்ற வரிகள் தற்போது நடுகைக்கு செல்லும் பெண்கள் குடிக்க கைகளில் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில் என்ற அவல நிலையை கண் முன்னே காட்டுகிறத. இங்கே கல்யாண்ஜியின் கவிதை வரிகள் ஒன்று நினைவுக்கு வருகிறது. “இரண்டு கைகளில் நன்றாக அள்ளி வாய் கொப்பளித்து ஆற்று நீரில் விடுவேன். மீண்டும் இரண்டு கைகளால் அள்ளி அள்ளிப் பருகுவேன்” என்று கவிதையே அது. தற்போது அவ்வாறு அள்ளி அள்ளிப் பருக இயலுமா என்பது நம் முன்னே நிற்கும் மிகப்பெரிய கேள்விக்குறி. நாவலில் ஆர் எஸ்.ஜேக்கப், பரிமேலழகர் பரி, இசக்கி ராஜன், பார்வதி முத்தமிழ் போன்றவர்களுடைய படைப்பும் முகநூல் பதிவுகளும் கதையினுடைய போக்கிற்கு காட்சிமைப்படுத்துதலுக்கு உதவி செய்திருக்கிறது. நேர்த்தியாக தன் சக எழுதாளுமைகளை கையாண்டிருப்பது முத்தாலங்குறிச்சியாரின் பெருந்தன்மைக்கு சான்று. “நான் தண்ணீராக ஓடி வந்த தாகம் தீர்த்தேன். ஆனால் நீங்க சாக்கடையை கலக்குறீங்க. நான் விவசாயத்துக்கு தண்ணீர் தாறேன். ஆனால் என் உடலில் இருக்கிற மணலை நீங்க திருட்டுத்தனமாக விக்கிறீங்க. என் உடலெல்லாம் இயந்திரத்தை வைத்து கூறு போட்டு ரணத்தை ஏற்படுத்துறீங்க. என் குழந்தைகளான விதவிதமான மீன்கள் எல்லாம் செத்துப் போச்சு. கொஞ்சம் கொஞ்சமாக நானும் செத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று தாமிரபரணித்தாய் அழும் ஓலம் நம்மை தூங்க விடாது. இனிமேலும் இவ்வாறு தாமிரபரணியை நாம் வைத்திருந்தால் கடைசி சொட்டு தண்ணீர் கூட நமக்கு எஞ்சுமா? என்பது ஐயமே. கிராமிய மணங்கமழும் கிராமத்தை கண் முன்னே காட்டும் நாவல் தீதும் நன்றே. திருநெல்வேலி மாவட்டத்தில் ‘தொட்டதெல்லாம் வரலாறு டே ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு வரலாறு சொல்லும்ல’ என்று முத்தாலங்குறிச்சி காமராசு பதிவு செய்திருப்பதை மெய்ப்பிக்கிறது இந்த ‘தீதும் நன்றே’ நாவல். பாரதிராஜாவின் மண்வாசனை, முதல் மரியாதை போன்ற திரைப்படம் எவ்வாறு ஒரு கிராமியச் சூழலை கண்முன்னே காட்டியதோ அதேபோன்று தீதும் நன்றே நாவல் நம்மை கிராமத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் சிறிது ஐயம் இல்லை. #தீதும்நன்றே… #முத்தாலங்குறிச்சிகாமராசு… #சுவடுபதிப்பகம்… #பக்கங்கள் 280. #விலை ரூ. 300