
நானும் டாக்டர் சுதாகர் அவர்களும் குவைத் செல்ல நாள் குறிக்கப்பட்டது. 2024 மே மாதம் 10,11, தேதிகளில் குவைத் மாநகரில் எங்களுக்கு நிகழ்ச்சி. அங்குள்ள தமிழ்நாடு பொறியாளர் சங்க 25 வது ஆண்டு விழாவில் நாங்கள் இருவரும் பேச வேண்டும். ஆதிச்சநல்லூர் , தாமிரபரணி நாகரீகம் பற்றி முதல் நாளும் மறுநாள் பெண்கள் கூடுகையில் ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகளை பேசவேண்டும் என நாள் குறித்து அழைப்பிதழ் எங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வேளையில் என்னை குவைத்துக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதற்காக என்னோடு பயணம் செய்தார் டாக்டர் சுதாகர். அவரும் எகிப்து தமிழர் நாகரீகம் ஒற்றுமை குறித்து முதல் நாள் பேச ஒதுக்கப்பட்டது.
நாங்கள் அதற்காக தயாரானோம். டாக்டர் சுகாதர் அவர்கள் என்னுடைய புத்தகங்களை அங்கு அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தார். ஆகவே என்னுடைய தலைத்தாமிரபரணி, தென்பாண்டிச்சீமையிலே பாகம் 1, கொன்றால் தான் விடியும்,, நெல்லை நாட்டுப்புற கலைஞர்கள், அத்ரி மலை யாத்திரை போன்ற நூல்களை கொண்டு சென்றோம். மேலும் ஒரு நாள் தமிழக தொல்லியல் சம்பந்தப்பட்ட கண்காட்சி வைப்பதற்காக சுமார் 20 படங்களை தேர்வு செய்து அதையும் வைத்துக்கொண்டோம். இதில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கீழடி உள்பட பல்வேறு தொல்லியல் தளங்கள் படங்களை பிரிண்ட் அடித்து கொண்டு சென்றோம். இதனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட எடை சரியாக இருந்தது. அதை சுமக்கவும் கடினமாக இருந்தது.
குவைத்தில் TEF (Tamilnadu Engineers Forum) தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம் என்ற அமைப்புத்தான் எங்களை அழைத்து செல்கிறது என்று கூறியிருந்தோம். தமிழ்நாடு பொறியாளர் சங்க அமைப்பில் குவைத்தில் வசித்துவரும் தமிழ் பேசும் பொறியாளர்கள் மற்றும் தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற பிற மாநில பொறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்புதான் 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காக எங்களைக் குவைத்திற்கு அழைத்தது.
இந்த அமைப்பில் சுமார் 550 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பு நடத்தும் விழாக்களுக்கு இவர்களின் குடும்பத்தினர் அனைவரும் வருகை தருவார்கள். எனவே சுமார் 1500 முதல் 2000 மக்கள் கூடுவார்கள். எனவே இருவரும் நாங்கள் பேசும் போது திரையில் படங்களை காட்டும் வண்ணம் இங்கிருந்து பவர் பாய்ண்ட் சரி செய்து கொண்டு சென்றோம்.
பொதுவாக ஒரு நாட்டிற்குள் நுழைய வீசா வேண்டும். பெரும்பாலான நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் உள்ளன. அவை தங்கள் நாட்டு விசாவை நம் பாஸ்போர்ட்டில் பதிவிட்டுத் தருவார்கள். அந்த பாஸ்போர்ட்டைக் காட்டி நாம் பிற நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
ஆனால் குவைத்தில் அப்படி அல்ல. நம்மை அழைப்பார்கள்தான் நமக்கு விசா எடுக்கவேண்டும்.
அந்த வீசாவின் மென்நகலை நமக்கு மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ அனுப்பி வைக்கின்றனர். விசாவின் அசலை குவைத் விமானநிலையத்தில் உள்ள குடியுரிமை அலுவலகத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.
நமக்கு வந்த வீசாவை வண்ணப் படமாகப் பதிவிட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.?
குவைத்தில் இறங்கியதும் விசாவின் வண்ண நகலை அந்த நாட்டுக் குடியுரிமை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களிடம் உள்ள அசல் விசாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே குவைத் மண்ணில் கால் வைக்கலாம். இல்லை என்றால் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி விடுவார்கள்.
அதற்காகத்தான் இந்த விசா பாஸ்போர்ட் போன்ற எல்லாவற்றையும் சரியாக சேகரிக்க டாக்டர் சுதாகர் எனக்கு உதவியாக இருந்தார்.
அவர் தன்னோடு தனது மகளை எங்கள் பயணத்தின் போது குவைத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் முடியவில்லை. காரணம் 22 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் கட்டாயம் தங்கள் அம்மாவுடனே குவைத் செல்ல முடியும்.
டாக்டர் சுதாகர் அவர்களின் மகளுக்கு வயது 16தான் ஆகிறது. இதனால் அவர் மனைவி அவருடன் குவைத் வராததால் அவர் மகளை குவைத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதுபோன்ற கட்டுபாடுகள் பல உண்டு. எனவே மற்ற நாடுகளை போலவே குவைத்துக்கு மிக சுலபமாக செல்ல இயலாது.
எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருப்பது டாக்டர் சுதகாகரின் நண்பர் பலவேச முத்து அய்யாத்தான். இவர் திருநெல்வேலி காரர்தான். இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தவர். குவைத் மாநகரில் தங்கப்பனை எனும் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வருகிறார். இவர் தான் பிறந்த நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என பல்வேறு உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறார். தற்போது குவைத்தில் நடைபெறும் சங்கம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த நூலில் அவரை பற்றி பல இடங்களில் பேசுவோம்.
8.05.2024 அன்று காலையிலேயே பரபரப்பாகி விட்டோம்.
முதன் முதலில் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் எனக்கு காலை முதலே பரபரப்பு ஏற்பட்டது. காலை 10 மணிக்கெல்லாம் செய்துங்கநல்லூரில் உள்ள எனது வீட்டில் இருந்து அழைத்து செல்ல டாக்டர் சுதாகர் அய்யா அவரது காரில் வந்து விட்டார். காரை எனது வீட்டு அருகே நிறுத்தி விட்டார். எங்களை அழைத்து செல்ல நண்பர் கருங்குளம் சச்சின் முத்துகுமார் மூலமாக வாடகை கார் ஒன்றை பிடித்துக்கொண்டோம்.
எங்கள் இருவர் பெட்டியிலும் புத்தகம் மற்றும் கண்காட்சி சம்பந்தப்பட்ட படங்களை அடுக்கினோம். இரண்டு பேர் லக்கேஜ் எடை பார்க்கப்பட்டு சரி செய்தோம். அதன் பின் பாஸ்போர்ட், விசா உள்பட தேவையான பொருள்களை பத்திரப்படுத்திக்கொண்டோம். குறிப்பாக மாத்திரை உள்பட மருந்து பொருள்களையும் மூன்று நாள்களுக்கு தேவையாக சேகரித்துக்கொண்டோம்.
அதன் பின் வாடகை காரில் தூத்துக்குடி நோக்கி பயணம் செய்தோம். எங்களை வீட்டில் இருந்து வழியனுப்பி வைக்க கார் தூத்துக்குடி நோக்கி கிளம்பியது. பாளை கே.டி.சி நகரில் மதிய சாப்பாட்டை வாங்கி வைத்து கொண்டோம். மாலை 4.30 மணிக்குத்தான் எங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் ஆனாலும் நாங்கள் சரியாக 2 மணிக்கெல்லாம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.
ஏற்கனவே இந்த விமான நிலையம் குறித்து நான் எனது நூலான தூத்துக்குடி மாவட்ட வரலாறு என்ற நூலில் எழுதியிருந்தேன். அதை தங்களிடம் நினைவு படுத்த விரும்புகிறேன்.
தூத்துக்குடியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை அருகே வாகைக்குளம் என்னும் இடத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதனை அப்போதைய முதல் அமைச்சரான ஜெயலலிதா திறந்து வைத்தார். இங்கிருந்து முதல் விமான சேவை 1992ம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி விமானநிலையம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஓ. எச் பாரூக் தலைமை வகித்தார்.
தூத்துக்குடியில் தற்போது உள்நாட்டு விமான நிலையமாவே இயங்கி வருகிறது. இந்திய விமானநிலைய ஆணையம் மூலமாக இந்த விமான நிலையம் இயக்கப்பட்டுவருகிறது. நிறுவனத் தலைமையகம் புதுடெல்லி சப்தர் ஜங் விமான நிலையமாக உள்ளது.
விமானநிலையத்தின் உயரம் 25.61 மீட்டர். ஓடுதளம் 28/10, ஓடுதளப் பரிமாணம் 1350.30 மீட்டர்ஸ், விமான நிலையத்தின் பரப்பு 188.56 ஏக்கர்ஸ் வருகை மற்றும் புறப்பாடு என தலா 1 ஓடுதளம் உள்ளது.
தென்தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். முதன் முதலில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வாயுதூத் ரக விமானம் இயக்கப்பட்டது. இந்த விமான சேவை 14 மாதங்கள் மட்டுமே நடைபெற்றது. அதன்பின்னர் என்.இ.பி.சி.நிறுவனம் 1996ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மீண்டும் சென்னைக்கு விமான சேவையை துவங்கியது. இந்த விமான சேவையும் 6 மாதங்களோடு முற்றுபெற்றது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையம் விமான சேவைகள் எதுவும் இன்றி சுமார் 10 ஆண்டுகள் பெயரளவில் விமான நிலையமாக இருந்து வந்தது.
ஏர்டெக்கான் நிறுவனம் 2006ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமான சேவையைத் துவங்கியது. பின்னர் இந்நிறுவனம் கிங்பிஷர் நிறுவனமாக மாறியதை தொடர்ந்து தூத்துக்குடியிலிருந்து தினமும் கிங்பிஷர் விமானம் சென்னைக்கு இயக்கப் பட்டு வருகிறது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் காலைநேர விமான சேவையை சென்னை& தூத்துக்குடி இடையே துவங்கியது. இந்த விமான சேவையானது தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடியில் இருந்து சென்னை வழியாக பெங்களூருக்கு கூடுதல் விமானம் தினமும் மாலையில் இயக்கப்பட்டுவருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ளது. தற்போது தூத்துக்குடி விமான நிலையம் விரிவுபடுத்தும் பணி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
எதிர்கால வளர்ச்சித்திட்டம் 586 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி விரிவாக்கம் பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விமான நிலையம் விரிவுப் படுத்தப்படும் போது சரக்கு கையாளவும், வெளிநாட்டு விமான நிலையங்கள் உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இரவு நேர விமான போக்குவரத்து நடைபெறவும் உள்ளது.
கடந்த 2021 ல் ஆகஸ்டு மாதம் உலக அளவில் தூத்துக்குடி விமான நிலையம் முதலிடம் பிடித்தது. அதாவது சரியான நேரத்தில் இயக்குவது, பயணிகளை சரியான முறையில் வழிநடத்துவது. பயணச்சீட்டுகளை திரும்ப பெறாமல் மக்கள் பயணித்த வகைக்காக “ஆன் டைம் பெர்ப்பாம்ஸ்” என்ற வகையில் முதலிடம் கிடைத்தது.
விமான நிலையம் மிகச்சிறியது தான். இதை விட பன்னாட்டு விமானம் மிகப்பெரியதாக இருக்கும் என டாக்டர் சுதாகர் என்னிடம் கூறினார். நான் ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் இருந்து மும்பை பறந்து இருக்கிறேன். அந்த விமான நிலையத்தினை விட மிகச்சிறிய விமான நிலையம் தான் தூத்துக்குடி. ஆனாலும் இந்தகாலகட்டத்தில் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளி வந்துள்ளது. அதில் சென்னைக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக உருமாறுகிறது என்பது பெரும் சந்தோசம். ஒரு வேளை அடுத்த வெளிநாட்டு பயணம் நான் தூத்துக்குடியில் இருந்து செல்லும் போது அந்த நாட்டுக்கு நேரடியாகவே செல்ல வாய்ப்பு இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
இதற்கு காரணம் உண்டு.
தற்போது புதிப்பித்து விரிவாக்கம் செய்யப்படும் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏர் பஸ் விமானம் வந்து செல்லும் என்ற அறிவிப்பு பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்த அறிவுப்புக்கு எல்லோருக்கும் சந்தோசம். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு அருகாமையில் உள்ள சரவதேச விமானநிலையம், திருவனந்தபுரம் தான். இந்த விமான நிலையம் 105 கிமீ தொலைவில் உள்ளது. காரில் பயணிக்க சுமார 1 மணி 45 நிமிடம் ஆகும். ஆனால் தூத்துக்குடி விமானநிலையம் 75 கிமீ தொலைவில் உள்ளது 1மணி 15 நிமிடத்தில் இந்த விமான நிலையத்தினை சென்று அடையமுடியும்
தமிழகத்தில் நான்கு வழிப்பாதைகளையும் கொண்ட ஓரே மாவட்டம் தூத்துக்குடி தான். வான்வழி, தரைவழி, ரயில் வழி, கப்பல் வழியென நான்கு தடங்களையும் உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் ஐந்தாவது தடமாக விண்வெளி தடமும் அமைய உள்ளது. தொழிற்சாலைகள், துறைமுகம் என வளர்ந்து வரும் நகரமாக தூத்துக்குடி இருந்து வருகிறது. பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்து புதிய திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் ஐந்து முறை விமானமும், பெங்களூருக்கு இருமுறை விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்கள் வசதிக்காக தூத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் அமைத்தல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய பயணிகள் முனையம் 17 ஆயிரத்து 341 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டிடங்கள், தீயணைப்புத்துறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமானநிலைய புதிய முனையத்துக்கு செல்லும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்புச்சாலை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுண்டர்களும், 3 ஏரோ ப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி. அறைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்துக்கு 1440 பயணிகளை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணிகள் வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதி நவீனவசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டிடங்கள் முழுவதும் சோலார் பொறுத்தப்பட்டு உள்ளது. தற்போது வரை 76 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற 2024 அக்டோபர் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதே போன்று ரூ.113.63 கோடி மதிப்பீட்டில் 3115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தற்போது வரை 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது.
தற்போது கூட நெல்லை தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் வாகைக்குளம் டோல்கேட் அருகில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தின் முகப்பு நமது கண்களுக்கு தென்படுகிறது.
தூத்துக்குடியில் நாங்கள் இருவரும் மதிய உணவை முடித்தோம். அதன் பின் சுமார் 3 மணி அளவில் எங்களை சோதனையிட்டனர். எங்களது லக்கேஜ் எல்லாவற்றையும் எடை போட்டு நேரிடையாக சென்னையில் எங்களிடம் தாரமல் நேரிடையாகவே குவைத்தில் வந்து எடுத்துக்கொள்ளும் படியாக ஏற்பாடு செய்து கொடுத்தார் விமான அதிகாரி.
ஆனால் நாங்கள் எதற்கு குவைத் செல்கிறோம். அங்கே எந்த இடத்தில் தங்குகிறோம் என பல கேள்விகளை கேட்டார். டாக்டர் சுதாகர் அதற்கெல்லாம் தயங்காமல் பதில் கூறினார். அவருக்கு கடந்த முறை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் இங்கு கை கொடுத்தது. எனவே தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம் நடந்து 25 வது ஆண்டுவிழா சம்பந்தப்பட்ட அழைப்பிதழை கொடுத்தோம்.
அதன் பிறகு எங்களை அனுமதித்தார்கள். நாங்கள் விமானத்தில் ஏற தயாராக அடுத்த வெயிட்டிங் ஹாலில் போய் அமர்ந்தோம். சரியாக மாலை 4.25 மணி. சுமார் 95 பயணிகளைச் சுமந்து கொண்டு தூத்துக்குடியிலிருந்து இன்டிகோ விமானம் சென்னையை நோக்கிப் பறந்தது.
பயணத்தின் போதே குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தினைப் பற்றி அசைப்போட்டேன்.
( குவைத் பயணம் தொடரும்)