கண்கவர் சோலைகள், கரைபுரண்டோடும் நதிகள், வானளாவிய மலைகள், பரந்து விரித்த வயல் வெளிகள், முப்புரமும் கடல்கள் என இயற்கை வளங்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு ஆயிரமாயிரம்” ஆண்டுகளாக வனப்புடன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள் பாரததேவி. எந்த ஒரு நாட்டில் இயற்கை வளம் மிகுந்துள்ளதோ அந்நாட்டின் மீது அந்நியர்களின் படையெடுப்புகளும் மிகுதியாக நடைபெறும் என்பது வரலாற்று உண்மை. அந்த வகையில் பாரதத்தை ஆக்கிரமிக்கவும், இயற்கை வளங்களைக் கொள்ளை கொள்ளவும், பல படையெடுப்புகள் தடைபெற்றன என்பதில் வியப்பொன்றுமில்லை.
பாரதத்தை அடக்கி ஆண்டவர்களைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி நாடோடிகளாக வந்த பல கூட்டத்தினர். வடமேற்குக் கணவாய் வழியாக பாரதத்திற்குன் புகுந்து பின்னர் தங்களுடைய செல்வாக்கை உயர்த்திக் கொண்டு வருங்காலத்தில் நாட்டையே ஆண்டவர்களும் உண்டு. பாரதத்தின் இயற்கை அழகிலே மயங்கி பாரதத்திலேயே நிலையாகத்தங்கி அரசாண்டவர்களும், உண்டு. சிற்றரசர்களுக்கிடையே நடைபெற்று வந்த பூசல்களைத் தீர்த்து வைக்கிறோம் என்ற போர்வையில் பாரதத்திற்குள் நுழைந்து பின்னர் தாமே நாட்டை அரசாட்சி செய்தவர்களும் உண்டு. வணிகர்களாக பாரதத்திற்குள் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களும் உண்டு, பாரதத்தின் பெரும் பகுதியை அடக்கியாண்டவர்கள் வணிகர்களாக வந்தவர்களே ஆவர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் ரோம். கிரீஸ், பாபிலோன் போன்ற பல வெளிநாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தது. இந்நிலையில் பாரதத்திற்குக் கடல்வழி கண்டுபிடிக்க பல மேற்கத்திய நாடுகள் முயற்சித்தன. போர்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமாவால் கி.பி. 1498-ல் பாரதத்திற்குக் கடல்வழிக் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள்(ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்) போன்றவர்கள் பாரதத்திற்கு வணிகம் புரிய வந்தனர். பின்பு உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு பாரதத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றினர். இவர்களின் வழியிலேயே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வெள்ளையர்களும் பெரும் எண்ணிக்கையில் பாரதத்திற்கு வணிகம் புரிய வந்தனர்.
நாளடைவில் பாரதத்தை ஆண்ட சிற்றரசர்களுக் கிடையே நிலவிய சண்டைச் சச்சரவுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாரதத்தின் சில பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகள் அனைத்தையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர். இவர்கள் பாரதத்தின் செவ்வங்களை யெல்லாம் கொள்ளையடித்து தங்களுடைய நாட்டுக்குக் கொண்டுச் செல்வது? பாரத மக்களின் உழைப்பைச் சுரண்டுவது, கல்வியைப் பரப்புகிறோம் என்ற போர்வையில் மதமாற்றம் செய்வது போன்ற பல கொடுமைகளை இந்திய மக்களுக்கு இழைத்தனர். இந்தக்கொள்ளைக் கும்பலை நாட்டை விட்டு விரட்ட 1857 ஆம் ஆண்டு முதலே இந்தியத் திருநாட்டில் பல போர்கள் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனாலும் வெள்ளையர்கள் அனைத்தையும் முறியடித்து விட்டனர்.
1885 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்திய விடுதலைக்காக அரும்பாடு பட்டது. இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களெல்லாம் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்தனர். காங்கிரஸ் கட்சி வெருவிரைவாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் 1935 வரை உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி சற்று குறைவாகவே இருந்தது. நாடு விடுதலை பெற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் பலர் இருந்தாலும் வீதிக்கு வந்து போராடும் அளவிற்கு துணிச்சல் இல்லாமல் இருந்தனர். விடுதலைப்போர் நடைபெற்ற கடைசிக் காலக்கட்டத்தில்தான் உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சி வளர்ந்தது. இப்பகுதி வீரர்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றனர். சில ஆண்டுகளிலேயே பொது விடுதலை கிடைத்ததால் பின்னர் போராடும் அவசியம் இல்லாமல் போய்விட்டது.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி உடன்குடி பகுதியில் மிகவும் குறைவாக இருந்த நேரத்தில் படுக்கப்பத்தைச் சேர்ந்த ராமசாமி நாடார் என்பவர் மகன் மேகநாதன் உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டார். உருவத்தில் குள்ளமாக இருந்தாலும் அவருடைய எழுச்சிமிகு பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது. 16 வயதிலிருந்து 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பலர் மேகநாதனின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டனர். இதனால் உடன்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சி வெகுவேகமாக வளரத்தொடங்கியது. உடன்குடியில் புகையிலைக் கடை நடத்தி வந்த சித்திரம் பிள்ளை என்பவரும் காங்கிரஸ் கட்சியை வளர்க்க அரும்பாடு பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியைப் புகழ்ந்து யாரேனும் பேசினால் 5 ரூபாய் அப்போதைய காலகட்டத்தில்) கொடுத்து விடுவாராம் மேகநாதன் இட்ட ஆணையை நிறைவேற்றத் தங்களுடைய தொழில், குடும்பம் ஏன் உயிரையே தியாகம் செய்ய நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்வந்தனர்.
அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஆலந்தலையைச் சேர்ந்த ஏ.எஸ்.பெஞ்சமின், கொட்டங்காட்டைச் சேர்ந்த ஏ.டிகாசி, கதிர் பிரகாஷ் என்ற ரெத்தினசாமி. சீர்காட்சியைச்
சேர்ந்த தியாகி கனி நாடார், தியாகி செல்லத்துரை. ஜி.நாராயணன், சந்தையடியூரைச் சேர்ந்த எஸ்.ரெத்தினசாமி, க.பொன்னையா நாடார். பொ.தேவயிரக்கம் நாடார். தேரியூரைச் சேர்ந்த வ.மந்திரம், ஏ.எஸ்.தங்கையா நாடார், வி. ஆறுமுகநாதன். காலங்குடியிருப்பைச் சேர்ந்த எஸ்.பூவலிங்கம். அ.ஆதித்தன், உடன்குடி பி.எஸ்.எம்.புகாரி, இரா.தங்கையா, பி.சரவணப்பெருமாள். மாதவன்குறிச்சியைச் சேர்ந்த நெல்லையப்பன், ஜி.இ.முத்து, தண்டுபத்தைச் சேர்ந்த ஆர். செல்லத்துரை, வே.ஆறுமுகநயினார். சு.லெட்சுமண நாடார் செட்டியாபத்தைச் சேர்ந்த மு.அருணாச்சலம் நாடார், எம்.ராமசாமி. பி.சிவசுப்பிரமணிய ஆதித்தன் நாடார். குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த வி.காளியப்பன். மருதூர்கரையைச் சேர்ந்த காத்தக்குட்டித் தேவர் படுக்கப்பத்தைச் சேர்ந்த மங்களா பொன்னம்பலம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மேகநாதனின் தலைமையின் கீழ் வந்தனர். இத்தகைய இளஞ்சிங்கங்களைத் தன்வசம் வைத்திருந்த மேகநாதன் இளைஞர்களை யெல்லாம் ஒன்று திரட்டி நள்ளிரவில் காட்டிற்குள் இரகசியக் கூட்டம் நடத்துவது வழக்கம். அப்போது மேகநாதன் உணர்ச்சி பொங்கப் பேசுவார். அது இளைஞர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் இல்லாத இளைஞர்கள் கூட ஏதேச்சையாக மேகநாதனின் பேச்சைக் கேட்டுவிட்டால் உடனே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுவார்களாம். அவரது பேச்சில் அவ்வளவு ஈர்ப்பு!
(தொடரும்)


