திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 1986 ஆம் ஆண்டு சிதம்பரனார் என்ற பெயரில் பிரித்து உருவாக்கப்பட்ட இன்றைய தூத்துக்குடி மாவட்டம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய களமாக இருந்தது.
விடுதலைப் போராட்டத்தில் போராடி தங்கள் உடல் உறுப்புகளையும் , நல் வாழ்க்கையையும் , இன்னுயிரையும் இழந்த வீரர்களுள் மிகக்குறைந்த எண்ணிக்கையாலானவர்களை மட்டும்தான் தியாகிகளின் வரலாற்றுப் பட்டியலில் காலாகாலமாக வாசித்து வருகிறோம்.அதிலும் ஒருசிலரை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம்.
குறிப்பாக ,கட்டப்பொம்மன், ஊமைத்துரை, பாட்டால் போராட்டத்தை உசுப்பிய பாரதி, பூலிதேவன்,வாஞ்சிநாதன், வெள்ளைய தேவன்,அழகுமுத்துக்கோன், வ.உ.சி,வ.வே.சு ,..போன்றோரின் தியாகங்களை ஓரளவு நமது தேசிய விழாக்களின் போது நினைவுப் படுத்திக் கொள்ளும் நிலையில்… தியாகி பெஞ்சமின், முத்துப்பட்டவராயன்,ஆறுமுகநேரி தங்கவேல், மதுரகவி பாஸ்கரதாஸ், எம்.சி வீரபாகு, செந்தில் பெருமாள்_ லெட்சுமி ,மாசிலாமணி_ ஜெபமணி இணையர்கள் போன்ற
வீர தியாகிகளை
இந்நூல் கண்முன் நிறுத்தி தொன்மை வாய்ந்த தூத்துக்குடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளையும் மறந்திருக்கவே கூடாத இருநூருக்கும் மேற்பட்ட தியாக ஆளுமைகளையும்
ஆதாரப்பூர்வமான தகவல்களால் உறுதிப்படுத்தி நினைவில் பதிக்கிறது இந்நூல்.
அத்தோடு தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பம்சங்களில் தொடங்கி
கோவில்பட்டி,கடலையூர்,மணியாச்சி ஆஷ்துரை, குலசேகரபட்டணம் லோன் துரை கொலைவழக்குகள் எனச் சுதந்திரப் போராட்டத்தின் உயிர்நாடியான சம்பவங்களை விவரித்துச் செல்கிறது.
உப்புச் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற மிக முக்கிய சுதந்திரப் போராட்டங்கள் பற்றியும் அநீதியை எதிர்த்து நடந்த இச்சுதந்திரப் போராட்டங்கள்,அன்றைய அரசை எதிர்க்கும் இந்தியர்களின் ஆணவப்போக்கு என்ற பெயரில் சித்திரவதைகள்,பெருந்தாக்குதல்கள், கொடுமையான அடக்குமுறைகள், சிறைவாச உயிர் வதைகள்,செங்குருதி கொப்பழிக்க செக்கிழுத்த
வ உ.சி யின் சிறைவாசம் என்று போர்க்கால காட்சிகளாய் விரிகிறது.
மணியாச்சி ஆஷ் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் நடந்த லோன் துரையோடு நடந்த சண்டைக் காட்சியும் அதன் எதிர்வினையாகப் போராட்ட வீரர்கள் சந்தித்த சிறைவாசம்,அதற்கான மரண தண்டனை, விடுதலை என அனைத்தையும் விலாவாரியாக விவரிக்கிறார் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு.
உடன்குடி விடுதலைப் போராட்ட வீரர்களால் கொல்லப்பட்ட லோன் துரையின் சகோதரிகள் ஸ்காட்லாந்திலிருந்து குலசேகரபட்டினத்திலிருந்த அவரது கல்லறையை பார்த்துவிட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பும் முன் தங்களது சகோதரனை கொன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து அவர்களது தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரி வைஸ்ராய் வேவல் பி்ரபுவுக்கு கடிதம் எழுதினர் என்ற உருக்கும் செய்தியோடு தாலுகா வாரியாக தியாகிகளின் விடுதலை இயக்க வரலாற்றுப் பதிவு ,வாசகர்களின் புரிதலை எளிமையாக்கி எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள வழிவகுக்கிறது.
எளிய எழுத்து நடையில் வாசிப்போரை ஈர்க்கவல்ல கருத்துச் செரிவுடைய இந்நூலில் தியாகிகளின் பெயர்களோடு பிள்ளை,நாடார்,முதலியார்,தேவர்,செட்டியார் என்று சாதி அடையாளங்கள் இன்றி எழுதும் புதிய முயற்சியை கையாண்டிருக்கலாம் ஆசிரியர் என்று தோன்றுகிறது. சாதி அடையாளம் இல்லாத பெயர்களும்கூட அடையாளமற்ற சாதிகளின் குறியீடுகளாகவும் தெரிந்துதான் நிற்கின்றன.
தியாகிகள் பலரின் பேட்டிகளைப் பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு.அதிலும் மேலதிகமாக
கணவரை இழந்த தியாகிகளின் மனைவியர் அளித்திருக்கும் பேட்டிகள் மனத்தை உலுக்கும் உணர்வுப் பூர்வமானவை.
விடுதலை இயக்கங்கள் வளர தங்கள் பரம்பரைச் சொத்துக்களை விற்று உதவிய தியாகிகளுள் பலர் பிற்காலங்களில் மிக குறைந்தளவிலான ஓய்வூதியத்தையே பெற்று ஏழ்மையில் வாழ்ந்திருக்கின்றனர்.அதிலும்
வெளியுலகிற்கு அறியப்படாத பல தியாகிகள் ,தங்களை சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்று அரசுக்கு தெரிவிக்காமல் அல்லது நினைப்பூட்டாமல் எந்த உதவியும் பெறாமலேயே வாழ்ந்து மரித்திருக்கிறார்கள் என்ற தகவல்களைத் தியாகத்தின் உச்சமாக
உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர்.
உடன்குடி ஒன்றியத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் சம்பந்தப்பட்ட கல்வெட்டுகள் இருந்தததாகவும் புதிய கட்டிடம் கட்டும் போது அதை உடைத்து விட்டதாகவும் தற்போது மீண்டும் தியாகிகள் குறித்த கல்வெட்டுகளை வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர் என்று தகவல் பதிவாகியுள்ளது.
பெயரளவில்கூட மக்களால் அறியப்படாத தியாகிகளை மையமாக வைத்து வரலாற்றுப் பாதையில் தூத்துக்குடி மாவட்டம் கடந்து வந்த பாதையை , அதன் வளர்ச்சிநிலைகளை அரசியல் பின்புலன்களை, எளிமையாக ஆவணப்படுத்திய விதம் அருமை .இம்மாவட்ட நிர்வாகத்தின் இம்முயற்சி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டால் இன்னும் ஆயிரக்கணக்கில் அறியப்படாத தியாகியர் கூட்டத்தை இனங்காண முடியும்.

பேச்சுநடையில் மிக எதார்த்தமாக எழுதப்பட்டுள்ள இந்நூல் இளம் தலைமுறையினருக்கு நமது சுதந்திர போராட்டத் தியாகிகளின்
தேசப்பற்று, தன்னலமற்ற தியாகம், நிகரற்ற வீரம் போன்றவற்றை தெரியவைப்பது எளிது. வரலாறு மறத்தல் அல்லது கண்டுகொள்ளப்படாமை என்பதும் ஒரு சமூகத் தீமையே. சமூகத்தின் வலுவான இயக்கத்திற்கு வரலாற்றறிவு மிக முக்கியமான ஒன்று .அதற்கு இந்நூல் உதவும் என்பதை நம்பலாம்; தேசப்பற்றும் சமுதாயப் பிரச்சனைகளை சரியான கண்ணோட்டத்தோடு அணுகும் மனப்பான்மையும் எதிர்கால அபாயங்களை முன்னறியும் ஆற்றலும் சமூகத்தில் வளரும். வரலாறு மறத்தல் என்பது சமுதாய மறதி என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.
இந்நூல் இத்தகைய அபாயங்களைத் தவிர்க்கும் ,தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இருநூறுக்கும் மேற்பட்ட அறியப்படாத தியாகிகளின் ஒளிப்படங்களைச் சேகரித்து இணைத்திருப்பதும்
இறுதியில் முக்கிய நிகழ்வான குலசை சுதந்திர போர் என்ற தலைப்பில் லோன்துரையின் கொலைவழக்கை நாடகமாக எழுதி சேர்த்திருப்பதும் இந்நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
_ முனைவர்த.ஜான்சிபால்ராஜ்.
திருநெல்வேலி


