விவசாய அறுவடை கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் வட்டாரம் குளக்கட்டான்குறிச்சி கிராமத்தில் நேற்று முன்தினம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், மேலாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஜென்கின் பிரபாகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை செய்தனா்.
இதில் அறுவடை முடிந்த நிலப்பரப்பில் காய்ந்த நிலையில் இருந்த தோகை கிடந்துள்ளது.இதில் அந்த வழியாக சென்ற வழிப்போக்கர்களின் அலட்சியத்தால் தீ அணைக்காமல் போட்ட சிகரெட் அல்லது பீடியின் மூலமாக தீ பரவி இருக்கலாம் என்பதும் மேலும் தீ பற்றிய விவசாய பகுதி அறுவடை முடிந்த நிலப்பரப்பு என்பதும் தெரிய வந்தது.
மேலும் விவசாய நிலத்தில் உள்ள விவசாயக் கழிவுகளை தீயிட்டு எரிக்க வேண்டாம் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். விவசாய கழிவுகளை நிலத்திலேயே மக்கச் செய்து விளை நிலத்தின் வளத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். ஆய்வின்போது புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு,உதவி வேளாண்மை அலுவலர் காயத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.


