செய்துங்கநல்லூரி சாலை பணி இடையில் நிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தினால் வாகனம் செல்லும் போது ஏற்படும் புழுதி படத்தில் ஊருக்குள் உள்ள 100 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை தொழில் வளர்ச்சி சாலை 637 கோடி ரூபாய் செலவில் கடந்து ஜுலை மாதம் துவங்கப்பட்டது. இந்த பணியில் வி.எம். சத்திரத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள விட்டிலாபுரம் விலக்கு வரை சாலை மற்றும் பால பணிகள் முடிந்து விட்டது. அதன் பின் இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஊருக்குள் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மழை பெய்து கொண்டிருக்கும் போது அவசர அவசரமாக செய்துங்கநல்லூர் சாலை பணியை ஆரம்பித்தனர். மரத்தினை வெட்டினர் . ஆக்கிரம்பு இடங்களை அப்புறப்படுத்த கூறியபடி பொதுமக்களும் அப்புறப்படுத்தி கொடுத்தனர். இந்த சாலை தோண்டப்பட்டு, தற்காலிகமாக சல்லியை மட்டும் விரித்து வைத்து விட்டு சென்று விட்டார்கள். அதன் பின் கடந்த 1 மாத காலமாக பணி எதுவும் நடைபெறவில்லை. இதனால் பாதியில் விடப்பட்ட சாலையில் இருந்து புழுதி படலம் எழும்புகிறது. சாலையில் வாகனங்கள் செல்லும் போது எதிரில் வரும் வாகனம் தெரியாத வண்ணமும், இருசக்கர வாகனத்தில் வருவோர் கண்களில் புழுதி படலம் விழுந்து கண்ணை மறிப்பததால் பயணிகள் விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல் சாலையின் ஓரத்தில் உள்ள தென்னஞ்சோலை தெரு, அண்ணாநகர், சி.எஸ்.ஐ. கோயில் தெரு, ஆர்.சி கோயில் தெரு, செய்துங்கநல்லூர் கஸ்பா, வேளாளர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் தெரு, முஸ்லீம்தெரு, மூப்பனார் தெருவில் உள்ள சுமார் 100க்கு மேற்பட்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வீட்டினுள்ளும் புழுதி பரவுவதால் சாப்பாடு உள்பட வீடு குப்பையாகி விடுகிறது. சாலையோரத்தில் உள்ள கடைகளின் நிலையும் அதுதான். இதனால் பொதுமக்கள் நடமாடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த கோதர் கூறும்போது, சாலை பணியால் எங்கள் ஊரில் சாலை ஓரம் உள்ள குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்கள் அறையில் இருந்து படிக்க இயலவில்லை. சாலை எப்போதும் புகைமண்டலமாகவே காணப்படுகிறது. எனவே உடனடியாக சாலையை புழுதி சாலையை மாற்றி தார் சாலையாக மாற்றி தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
வி.எம்.சத்திரத்தில் இருந்து நெல்லை மாவட்ட எல்கை வரை மிக வேகமாக வேலை நடந்தது. மழை காலத்திலும் பணி இடைவிடாமல் நடந்து வந்தது. ஆனால் செய்துங்கநல்லூர் ஊருக்குள் சாலையை அறை குறையாக போட்ட காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


