மணிமுத்தாறு அணை முன்னால் முதல்வர் காமராஜர் காலத்தில் விவசாயிகளின் ஆதரவுடன் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு 1 வது மற்றும் 2 வது ரீச் மூலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. 3 வது ரீச் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் பகுதி யில் உள்ள விளை நிலங்களுககு பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் 4வது ரீச் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம், திசையன் விளை உள்பட பகுதிகள் பயன் பெறுகின்றன.
இந்த முதல் 2 ரீச் பாசனம் ஒரு வருடமும், 3 மற்றும் 4 வது ரீச் பாசனம் மறுவருடமும் பாசன வசதி பெறும். இதில் மழை பொய்த்துவிட்டால் அந்த ஆண்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காது. அதோடு மட்டுமல்லாமல் முறை இல்லா விட்டாலும் கூட முதல் மற்றும் இரண்டாவது ரீச் விவசாயிகள் தண்ணீரை விட்டால் மட்டுமே மூன்று மற்றும் நாலாவது ரீச்சிற்கு தண்ணீர் வந்து சேரும். அப்படியே தண்ணீர் வந்தாலும் கூட முறைப்படி கால்வாய் தூர்வாரப்படாமல் புதர் மண்டிக்கிடப்பதால் விவசாயத்துக்கு வரும் தண்ணீர் வீணாக சென்று விடுகிறது.
3 வது ரீச் கால்வாய் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மிகப்பெரிய விரிந்தகால்வாய் சுருங்கி, தற்போது சிறு ஓடையாக மாறிவிட்டது. 3 வது ரீச்சில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 96 பாசன குளங்கள் உள்ளது. மேலும் இந்த குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பியுள்ள நிலையில், குளங்கள் தூர்வாராத காரணத்தினால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு மருகால் சென்ற விட்டது. தொடர் மழையால் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் பகுதியில் மணிமுத்தாறு கால்வாயின் கரை உடைந்து விட்டது. இதனால் ஊருக்குள்ளும், அருகில் இருந்த வயல்வெளிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. அதே போல் அருகே உள்ள சிந்தாமணி காட்டுப்பகுதியிலும் மணிமுத்தாறு கால்வாய் கரை உடைந்து தண்ணீர் வீணாக சென்று விட்டது. இதுவரை அதனை சீரமைக்கும் முயற்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த குளங்கள் சீரமைப்பு பணியில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அருகே சேரகுளம் குளத்தின் கரை கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் அரித்து செல்லப்பட்டது. எனவே இந்த கரையின் வழியாக விவசாயிகள் விவசாய தொழிலுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சேரகுளத்தின் மதகுகள் சீரமைக்கப்படவில்லை.
தற்போது 261 கோடி மதிப்பில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய மூன்று நதிகளையும் இணைக்கும் திட்டமான வெள்ளநீர் கால்வாய்ப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அந்த கால்வாய் திட்டத்தில் மணிமுத்தாறு கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப்பணிகளையும் முறையாக இதுவரை முடிககவில்லை. மணிமுத்தாறு கால்வாய்க்கு வருடம் தோறும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான எந்த நடவடிக்கையும் இது வரை நடைபெறவில்லை. பல கோடி ரூபாய் செலவழித்து உருவான வெள்ளநீர் கால்வாய் திட்டத்தினை நிறைவேற்றி,மணிமுத்தாறு அனைத்து கால்வாய்களையும் தூர் வாரினால் மட்டுமே இந்த பகுதியில் அதிக தண்ணீரை விவசாயத்துககிற்காக பயன்படுத்தலாம்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்கத்தலைவர் முருகேசன் கூறும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் இந்த மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. அதில் 3வது ரீச் மூலம் இந்த சாத்தான்குளம் பகுதி வறட்சியில் இருந்து மீண்டு தற்போது நல்ல முறையில் விவசாயப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து 25 ஆண்டுகளுக் மேலாக இந்த மணிமுத்தாறு கால்வாயின் 3வது ரீச் தூர்வாரப்படாமல் இருந்து வருகின்ற காரணத்தினால் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடை மடை விவசாயப்பணிகள் நடைபெறாமலும், விவசாயம் செய்தவர்கள் தண்ணீர் தண்ணீர் தட்டுபாடு காரணத்தினாலும் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு கால்வாயில் இருந்து குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்கள், குளங்கள் சீரமைக்கப்படவில்லை. இதனால் குளத்தில் மழை காலங்களில் நீரை தேக்கி வைத்து விவசாயப்பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலந்தும் கூட கடை மடை வரை தண்ணீர் செல்ல முடியாத நிலை பெரும் வேதனையை தருகிறது. மேலும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூலம் இந்த மணிமுத்தாறு பாசன பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பாக்கியநாதன் கூறுகையில், கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் மணிமுத்தாறு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நான் பயிரிட்டிருந்த வயல்வெளியில் ஒரு வாரத்திற்கு தண்ணீர் நின்றதால் எனது பயிர்கள் அனைத்தும் அழுகி விட்டது. இதனால் எனக்கு 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


