ஆடி அமாவாசையில் முக்கிய நிகழ்வாக சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ தர்பாரில் அமர்ந்தார். அவரை பார்க்கும் போதே மிக மிடுக்கான தோற்றம். நாம் எல்லாம் ராஜக்கள் என்றால் சினிமாவில்தான் பார்த்திருப்போம். அல்லது நாடகத்தில் கண்டிருப்போம். ஆனால் இங்கு உண்மையான ராஜா இங்கே அமர்ந்து இருக்கிறார். அதுவும் இந்தியாவிலேயே ஒரே ஒரு பட்டங்கட்டிய ராஜா.
செல்வி கேட்டாள். “அது ஏன் இங்கே மட்டும் இன்னவும் ராஜா இருக்காங்க”.
“அது ஒண்ணுமில்லை. ஜமீன் ஒழிப்புக்கு முன்னாடியே ராஜா சிறுவராக இருக்கும் போதே பட்டங்கட்டிட்டாங்க. அதுக்கப்புறம் இந்தியாவிலேயே வேறு யாருக்கும் பட்டம் கட்ட ல. அதானல இவர் மட்டும்தான் பட்டங்கட்டிய ஒரே ஒரு ராஜா”. தாணுலிங்கம் கூறினார்.
அந்த இடத்திற்கு சென்று செல்வியும் காளியும் ராஜாவை பார்த்தார்கள்.
ராஜா உயரமான ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் எல்லோரும் மிகப்பெரிய வி.ஐ.பியாக இருந்தாலும் கூட அவரை விட ஒரு படி கீழேயே அமர்ந்திருந்தார்கள். ராஜாவுக்குத்தான் எல்லா முக்கியத்துவமும் இருந்தது.
ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
சாமியாடிகள் அனைவரும் ஆதாழி போட்டு ஆடி வந்து, ராஜாவிடம் “உத்தரவு மகராஜா உத்தரவு மகராஜா” என கேட்டு பூக்குழி இறங்கினார்கள்.
இதுவுமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. என்னடா சாமியாடிகளிடம் சென்றுதான் திருநீர் வாங்குவார்கள். உத்தரவு கேட்டபார்கள். என்னடா இங்கே தலைகீழாக நடக்கிறது என்று நினைத்தாள் செல்வி.
இதற்கும் தாணுலிங்கம் சிரித்துக்கொண்டே பதில்சொன்னார். “இங்குள்ள அய்யன் சொரிமுத்து அய்யனாரே ராஜா ரூபத்தில் தான் இருக்கிறார் என நினைக்கிறார்கள். ஒருவர் கனவில் ராஜா வந்தால் கூட உடனே சொரிமுத்து அய்யனாரை கூம்பிட இங்கே ஓடி வந்து விடுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளேன்” என்றார்.
செல்விக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அதே வேளையில் மக்கள் கூட்டத்தினை பார்த்தும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் ஒரு திருவிழாவிற்கு கூடுமா? திருச்செந்தூர், இருக்கன்குடி,சங்கரன் கோயிலில் இதுபோல கூட்டம் பார்த்து இருக்கிறாள். அது எல்லாமே தரை தளம் தான். ஆனால் இங்கு மலைக்குள், ஒரு பெரிய வனத்துக்குள், வாகனங்கள் கரணம் தப்பினால் மரணம் என வரும் ஊசி வளைவு ஆபத்தான ரோட்டுக்குள் இருக்கும் திருவிழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டமா? என ஆச்சரியத்துடன் பார்த்தார்.
திரண்ட லட்சக்கணக்கான மக்கள் தாமிரபரணியில் நீராடினார்கள். ஆடிமாதம் சாரல் மழையில் நனைந்தபடியே அவர்கள் அங்குமிங்கும் அலைந்தனர். சிலர் குடும்பத்தோடு தங்க குடில் அமைத்திருந்தனர். வயதானவர்கள் கூட குளிரி கிடு கிடுவென ஆடிக்கொண்டே சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.
எங்குமே திருவிழா கோலம்.
சேர்வலாறு பாலம் சேர்வலாற்றில் மிக ஒய்யராமாய் நின்றது. அந்தபாலத்தில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வனத்துறையினர் ஒருப்பக்கம், கல்லிடைகுறிச்சி விக்கிரமசிங்கபுரம் காவல் துறையினர் மறுபக்கம் என அனைவரும் பாதுகாத்துக்கொண்டே இருந்தனர். ஆனாலும் கட்டுக்கடங்காத கூட்டம்.
மறு நாள்
கூட்டமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினார்கள். தாமிரபரணி மாசுவை சோதனையிட முனைவர் முருகேசன் குழுவினர் உள்ளே இங்கினர். அவருடன் காளி, செல்விஉள்பட11 பேரும் உதவி புரிந்தனர். உடனடியாக அவரின் லேப்பில் கொண்டு அந்த தண்ணீரை சோதனை செய்தனர்.
அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.
கடந்த வருடத்தினை விட 15 சதவீதம் கூடுதலாக நதி மாசு பட்டிருந்தது.
முனைவர் முருகேசன் மிகவும் மனது கஷ்டப்பட்டார். ஒருநதி இவ்வளவு சீக்கிரம் மாசுபடுகிறது. இதே நிலைமை நீடித்தால் நமது நிலைமை மோசமாகிவிடும். முழுக்க முழுக்க குடிதண்ணீரை நம்பி இருக்கும் நதி பாலைவனமாக மாறிவிடும். புழு போல நெளியும் தூர் நாற்றம் வீசும். மொத்தத்தில் கூவம் போல ஆகி விடுமே.
என்ன செய்யலாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காட்டை காப்பாற்ற வனத்துறை எடுத்துக்கொண்ட முடிவு போல நாடெங்கும் தாமிரபரணி பாயும் கரையில் நாம் முழு வீச்சாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
11 பேரும் அமைதியாக இருந்தார்கள்.
“தாமிரபரணிக்கு மிகப்பெரிய பிரச்சனை காத்துக் கொண்டிருக்கிறது. கடைகோடி தட்டில் இருக்கும மக்களுக்கு இந்த பிரச்சனை நிச்சயம் தெரியாது. எனவே இது மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்”. உறுதியாக சொன்னார் முனைவர் முருகேசன்.
“ஆமாம் அய்யா நான் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு சென்று இருந்தேன். அங்கே அமலை செடிகள் மிக அதிகமாக அடர்ந்து காணப்படுகின்றன. அதனால் தாமிரபரணி தூர் நாற்றம் வீசுகிறது”. காளி கூறியபோது அனைவரும் வேதனை பட்டனர்.
“ஆமாம் அங்குள்ள மக்கள் எல்லாம் பயப்படுகிறார்கள். பாம்பு போன்ற விசசந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்புக்குள் பாய்கிறது. இதனால் மக்கள் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்” காளி எடுத்து சொன்னான்.
“அடே காளி அதை விட பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கு . அந்த அமலை செடி இருக்கே. 1 செடி 1 மணி நேரத்தில் 4 லிட்டர் தண்ணீரை ஆவியாக்கி விடும். அப்படி யென்றால் எவ்வளவு தண்ணீர் வீணாக போகிறது பார். அப்படியென்றால் அமலை செடி முற்றிலும் அகற்றப்பட வேண்டுமே”. முனைவர் முருகேசனின் வாதம் இது.
தா ணுலிங்கம் சொன்னார். “அய்யா இதை தாசில்தாரிடம் ஒரு மீட்டிங்கில் சொன்னேன். அவர் வெள்ளம் வந்தால் போதும், எல்லா அமலை செடியும் கடலுக்கு போய் விடும் என அலட்சியமாக பதில் சொல்லுகிறார். அவர் சொல்லுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. கலெக்டரும் தலை அசைத்துக்கொண்டு போய் விட்டார்”.
“எதுவுமே சரியில்லை. அரசு சரியில்லை. மக்களும் சரியில்லை”. மனம் நொந்து போனான் காளி.
“இயற்கை அன்னை நமக்கு தந்திருக்கும் அற்புதமான தாமிரபரணியை பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லையே”.
மறுநாள் காலை கொக்கிரகுளம் சென்றார்கள்.
முனைவர் முருகேசன், தாணுலிங்கம் தலைமையில் 11 பேர் கொண்ட கும்பல் ஆட்சி தலைவரை பார்க்க காத்திருந்தனர்.
இவர்கள் அனைவரையும் மரியாதையுடன் அழைத்தார் கலெக்டர். அனைவருக்கும் இருக்கை போட்டார்.” சிறிது நேரம் என்னை யாரும் பார்க்க வரவேண்டாம்” என உதவியாளரிடம் கூறி விட்டு இவர்களிடம் பேச ஆரம்பித்தார்.
மாவட்ட ஆட்சி தலைவரிடம் அறிக்கையை தாக்கல் செய்தார்கள்.
அறிக்கையை ஒன்று விடாமல் புரட்டி பார்த்தார். முனைவர் முருகேசன் கூறுவதை நன்றாக கேட்டார்.
யோசித்தார்.
உண்மைத்தான் தாமிரபரணி காப்பாற்ற வேண்டும். இதற்காக பெரிய திட்டத்தினை தயாரிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாக்கடைகள் நதியில் கலப்பதை தடை செய்ய வேண்டும். எத்தனை வேலைகள் இருக்கிறது.
மாவட்ட ஆட்சி தலைவர் அந்த மனுவை வாங்கி வைத்துக்கொண்டார். இவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். இவர்களை எழுந்து நின்று மகிழ்ச்சியோடு வெளியே அனுப்பி வைத்தார்.
அவருக்கும் தர்ம சங்கடம். “என்ன செய்வது. 1 லட்சம் மக்கள் ஒன்றாக கூடி இருக்கிறார்கள். அவர்களை வராதீர்கள் என்று சொல்ல முடியுமா?”.
அரசு நினைத்தால் முடியும். ஆனால் தனது குலதெய்வத்தினை பார்க்க வராதீர்கள் என சட்டம் போட எந்த அரசு தான் முன்வரும். மொத்த ஓட்டு போடும் மக்களும் அவர்களுக்கு எதிராக கிளம்பி விடுவார்களே.
அதே நினைப்பு கலெக்டரிடம் இருந்தது. ஆனாலும் இது குறித்த அறிக்கையை தமிழக அரசுவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் என்ன செய்வது அதிகநாள் ஒரே இடத்தில் இருக்க முடியாதே- அவருக்கும் மாறுதல் உத்தரவு வந்து விட்டது.
*****
தாமிரபரணி தாய் வித்தியாசமானவள். தான் மாசு படுகிறோம். நம்மை காப்பாற்ற முடியாமல் இவர்கள் திணறுகிறார்கள் என அறிந்துகொண்டாள். எனவே தன்னைதானே சுத்தம் செய்ய வேண்டும் என்று தாமிரபரணி பொங்கி எழுந்தாள்.
அந்தநாள்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. தாமிரபரணி சீற்றத்தினை யாரும் எதிர்பாக்க வில்லை. எனவே அன்னை பல பேரின் உயிரை தனக்குள் இழுத்துக்கொண்டாள்.
பாபநாசம் அணைப் பகுதியில் 310 மிமீ மழை பெய்தது. சேர்வலார் அணைப் பகுதியில் 210 மிமீ மழை பதிவாகியது. இதன் காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை ஆகிய இரண்டு பெரிய அணைகளும் நிரம்பின. பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மிமீ மழை பதிவாகியது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் போன்ற ஊர்கள் எல்லாமே வெள்ளக்காடானது. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 321 மிமீ மழை ஒரே நாளில் பதிவாகியது. மணிமுத்தாறு அணைப் பகுதியில் 260.8 மிமீ மழை பதிவாகியது. திருநெல்வேலியில் சூறாவளியின் காரணமாக எட்டு மணி நேரம் தொடர் மழை பெய்தது.
அது மட்டுமா? மின்னல் தாக்கியது. பல உயரத்துக்கு இருந்த தேக்கு மரங்கள் எல்லாம் காற்றில் சாய்ந்தது. அவை சேர்வலாறு வழியாக இழுத்து வரப்பட்டது.
அணைகள் நிரம்பியதன் காரணமாக அதிகாரிகள் நவம்பர் 13 அன்று இரவு பாபநாசம் மற்றும் சேர்வலார் அணை மதகுகளைத் திறந்தனர். இரண்டு பெரிய அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் முண்டந்துறை ஆற்றுப் பாலத்தை சில நிமிடங்களில் அடைந்தது. பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றப் பட்டதைத் தொடர்ந்து 60 நிமிடத்திற்குள் மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அந்த நாளில் மூன்று அணைகளில் இருந்து விநாடிக்கு 2,04,273.8 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
யாருமே எதிர்ப்பார்க்க வில்லை. ஒரே நாள் இரவில் இவ்வளவு தண்ணீர் வரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
மிகப் பிரமாண்டமான சேர்வலாறு ஆற்றுபாலம் அடித்துச் செல்லப்பட்டது. சேர்வலாறு, மயிலாறு, காரையாறு பகுதியில் உள்ள காணிகள் குடியிருப்பு துண்டிக்கப்பட்டது. அங்கிருந்த மின்சார உற்பத்தி நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. எல்லாமே நாசமானது.
தன்னிடம் ஆட்டம் போட்ட மக்களை ஆட்டம் காண வைத்தாள் தாமிரபரணி. மணலை அள்ளுவோம் யாரு கேட்பார்கள் என நினைத்த மக்களுக்கு மனதில் உரைக்கட்டுமே என தாமிரபரணி ஆர்பரித்து ஓடினாள்.
ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகரில், தமது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. பாவம் எங்கே வெள்ளம் வரப்போகிறது என நினைத்து தூங்கி கொண்டிருந்தவர். அவர்களில் 17 பேர் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வெள்ளநீரில் சிக்கி உயிரிழந்தனர். நவம்பர் 14 அன்று அதிகாலையில் இந்த நிகழ்வு நடந்தது. அவர்களுக்கு எப்படி உதவ என்று கூட யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்குள் வெள்ளநீர் நுழைந்தது. பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பேருந்துகள் நீரில் மூழ்கின.
திருநெல்வேலி சந்திப்பில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதை யாரும் தெரிந்து வைத்திருக்க வில்லை. தாமிரபரணியின் ஆட்டம் சூடு பிடித்தது. நிறைய கடைகளில் துணிகள் உள்பட பொருள்கள். மிஷின்கள் என அனைத்தும் நாசமானது. அடைத்து கிடந்த சாக்கடை எல்லாம் தாமிரபரணி வெள்ளத்தில் திறந்து தண்ணீரை ஆற்றில் கொண்டு போய் சேர்த்தது.
சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. எத்தகைய வெள்ளத்திலும் நிலைகுலையாமல் இருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல்தளத்தில் இருந்த ஓடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. இந்த கோயிலே வெள்ளத்தில் மூழ்கி எந்திருக்கும் படியாகத்தான் எழுப்பப்பட்டிருக்கும். இந்த கோயிலையை ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டது வெள்ளம். திருநெல்வேலி சந்திப்பில் தேங்கிய வெள்ளம் வடிய 4 நாட்களானது.
மக்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நதியை பற்றி கவலை படாமல் கண்மூடித்தனமாக இருந்தவர்களை குறி வைத்து தாக்கியது போலவே இருந்தது தாமிரபரணியின் ஆட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆடியது. அங்கும் தாமிரபரணிதான். கோதையாறு, திருவட்டாறு, குழித்துறையாறு, என தாமிரபரணிக்கு அங்கு பல பெயர் உண்டு. ஆனால் எல்லா இடத்திலும் ஒரே வகையில் தான் பாதிப்பு. மக்களை உண்டு என பார்த்து விட்டது. திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துடனான சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், ரப்பர் தோட்டங்கள் மூழ்கின. குழித்துறை தாமிரபரணியிலும், பழையாற்றிலும் பல உடல்கள் அடித்து வரப்பட்டன. சுசீந்திரத்தில் தாணுமாலய சுவாமி கோயில் வரை வெள்ளம் புகுந்தது. சுவாமிதோப்பு உப்பளங்கள் மூழ்கின.
வருவாய் துறையும், காவல் துறையும், தீயணைப்பு துறையும் உதவ முன் வந்தனர். ஆனால் எப்படி உதவ எங்கிருந்து உதவ என தெரியாமல் தவித்து விட்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுபோன்று சிறிய புயல், வெள்ளம் வந்தால், அவற்றை சமாளிப்பது மிகவும் சிரமம் . ஆனால் தற்போது அடித்து நொறுக்கி விட்டது வடகிழக்கு பருவமழை. இந்த நேரத்தில் மக்களுக்கு உதவ தாணுலிங்கம் தனது தொண்டு நிறுவன தன்னார்வலர்களை முடுக்கி விட்டார்.
கஷ்டப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினார். சாப்பாடு ஒரிடத்தில் பொங்கி, அங்காங்கே இருந்த மக்களுக்கு பார்சல் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். காளியும் செல்வியும் இதற்கான வேலைகளில் மிகவும் துரிதமாக இறங்கினார்கள்.
பாபநாசத்தில் இருந்து தாமிரபரணி முடியும் வரை உள்ள ஆற்றில் உள்ள பாதிப்புகளை அரசு அறிய முடிவு செய்தது. அந்த முடிவை அறியும் பொறுப்பை தாணுலிங்கத்திடம் ஒப்படைத்தது.
தாணுலிங்கம் தலைமையில் காளி, செல்வி மற்றும் 11 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.
தாமிரபரணி கரையெங்கும் மக்கள் அலறிக் கொண்டிருந்தனர். எங்கும் பிரச்சனை எதிலும் பிரச்சனை. அகரத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர் இழுத்துக்கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் தாமிரபரணி ஆற்றில் உள்ள பனை மரம் ஒன்றின் கீழே தண்ணீர் வற்றிய பிறகு கிடைத்தது. பாவம் அந்த பனை மரத்தினை பிடித்து தப்பிக்கலாம் என நினைத்திருக்கிறார். பனை மரத்தினை கட்டிப்பிடித்தவாரே இறந்து கிடந்தார்.
அய்யோ இது போன்ற கொடுமையை என்ன சொல்வது. அந்த சோகத்தை கண்ணால் பார்த்த தன்னார்வலர்களால் சீரணிக்க முடியவில்லை. கருங்குளத்தில் தங்களது குடியிருப்புக்கு சென்ற நான்குபேரில் மூன்று பேரை சிவன் கோயில் வயற்காட்டுக்குள் பிணமாக கிடைத்தனர். பாவம் எதையாவது பிடித்து தப்பித்து கொள்ளலாம் என நினைத்திருப்பார்கள் போல, அதுபோலவே அவர்கள் கைகள் எதையோ பற்றிய படியே இருந்தது. அதில் ஒருவர் மூன்று நாள் மரத்தில் பிடித்துக்கொண்டே கிடந்து உயிர் தப்பினார்.
மூன்று மாவட்டத்திலும் மரண ஓலம். உயிரை இழந்த உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவா? துண்டிக்கப்பட்ட ஊருகளுக்கு சாலை இணைப்பை தருவதா?. உணவின்றி கஷ்டப்படுவோருக்கு உணவு கொடுப்பதா? எதை முதலில் செய்வது என தெரியாமல் தவித்தனர் தொண்டு நிறுவனத்தினர்.
காளிதான் சொன்னான். “அய்யா, ஒவ்வொரு பேர் தலைமையிலும் ஒவ்வொரு குழு அமைப்போம். இந்த குழுவினர் ஒவ்வொரு வேலை செய்யட்டும். அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உதவியோடு மற்ற வேலைகளை சிறப்பாக செய்வோம்” என்றான்.
தாணுலிங்கமும் அப்படியே செய்தார். செல்வி அலுவலகத்தில் இருந்து அனைவரையும் கண்காணித்தார். அப்போது ஒவ்வொருவரை கண்காணிப்பது என்பது கடினம். எங்கேயாவது ஒரு ஊரில் போன் இருக்கிறது என்றால் அந்த போன் போஸ்ட் ஆபிஸ் அல்லது ஊரில் உள்ள முக்கியமானவர்கள் வீட்டில் தான் இருக்கும். அந்த போனில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் . ஆனால் போன் இணைப்பு, மின்சார இணைப்பு எல்லாமே துண்டிக்கப் பட்டிருந்தது.
ஆகவே அரசே ஸ்தபித்துவிட்டது.
1992-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பின்னர்தான் வெள்ளப் பாதிப்புகளின் தாக்கம் குறித்து இங்குள்ளவர்களுக்கு தெரியவந்தது. ஆனால், அதிலிருந்து இன்னும் நாம் பாடம் கற்காமல் இருக்கிறோமே. அப்போதைய வெள்ளத்தில் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தார்கள். வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் ஆகின. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், திருநெல்வேலி-யில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லம் போக்குவரத்து சீராக 3 வாரங்கள் ஆனது.
இதையெல்லாம் நினைத்து பார்கிறார்கள். கொஞ்சம் சீரான உடன் பெரிய அறிக்கை ஒன்றை தாயார் செய்தார்கள்.
தாணுலிங்கம் அந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுத்தார்.
“கியூபா என்ற சிறிய நாட்டில் உலகிலேயே அதிக அளவில் புயல், வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அந்த நாடு இந்த பேரிடர்களால் நிலைகுலையவில்லை. காரணம், அங்குள்ளவர்களுக்கு முறையாக பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் கண்டிப்பாக இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்தகைய பயிற்சி நமது பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த வேலையை நாம் செய்ய வேண்டும்” என்றார்.
காளி கூறினான். “பெரும்பாலுமே வெள்ளப்பாதிப்புக்கு காரணம் ஆக்கிறமிப்புகள் தான் அய்யா. ஆறு செல்லும் இடத்தில் வீட்டை கட்டி வைத்த காரணத்தினால்தான் வீட்டுக்குள் இருந்த 27 பேரும் இறந்தனர். இந்த வீடு மேடான பகுதியில் இருந்தால் பிரச்சனையே இல்லையே”.
“இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற பாதிப்பு வரக்கூடாது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்”.
“ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை முறைப்படி அகற்றவும், கரையோர குடியிருப்பு வாசிகளுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ளும் பக்குவம் சிறியவயதிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும்’. அதற்கான பயிற்சியும் நாம் அரசோடு சேர்ந்து எடுக்க வேண்டும்”. என்றார் தாணுலிங்கம்.
நெல்லையில் தாமிரபரணியில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தாலே, இப்போது பாதிப்புகள் ஏற்படும் நிலையில் லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் வந்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எனவே வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களை தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். என்பதை உணர்ந்தார்கள்.
ராத்திரி பகலாக இதற்கான திட்டங்களை வகுத்தார்கள். தாணுலிங்கம் தலைமையில் காளியும் செல்வியும் வகுத்த மிகப்பெரிய திட்டம் உருவாகியது. அதை 1000 பக்கம் கொண்ட அறிக்கையாக தமிழக அரசிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்தார்கள்.
மழை கொஞ்சம் கொஞ்சமாக வற்றியது. என்ன ஆச்சரியம். தாசில்தார் சொன்ன மாதிரியே அமலை செடிகள் முழுவதும் அகன்று விட்டது. சாக்கடை கலந்த நதி, அந்ததந்த பகுதியில் தெளிவானது. தற்போது நிறைய ஆற்று மணல் மேலே இருந்து கொண்டு வரப்பட்டு பள்ளங்கள் எல்லாவற்றை யும் நிரப்பியது. தாமிரபரணியில்அள்ளப்பட்ட மணல் பள்ளங்கள் எல்லாமே மறைந்தது.
மொத்தத்தில் தாமிரபரணி சுத்தமானது.
தாணுலிங்கம் கூறினார்.
“இது நமது நதிக்கு நல்ல தருணம். இதுவரை நடந்த மணல் கொள்ளை, இதுவரை நாம் விட்ட சாக்கடை இதையெல்லாம் நிறுத்தி விட்டால் நமது நதி மீண்டும் நல்லதொரு தூய்மையான நதியாக மாறி விடும். அதற்கு நல்ல வாய்ப்பைதான் வெள்ளம் தந்துள்ளது” என மகிழ்ச்சியாக கூறினார்.
“உண்மைத்தான் தாமிரபரணி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டது. அதோடு மட்டுமல்லாமல் இப்படியே என்னை விட்டு விடுங்கள் என மக்களிடம் கோரிக்கையும் வைத்து விட்டது”. செல்வி வரக்கூடிய நாளில் தாமிரபரணி நிலை என்னவாகும் என்பது தெரியாமல் சிரித்தாள்.
இதற்கெல்லாம் இடியாய் இறங்கும் வண்ணம் தமிழக அரசு ஒரு திட்டத்தினை அறிவித்தது. இது நதியை காப்பாற்றும் திட்டமல்ல. ஆனால் பலருக்கு குதுகழிப்பை தந்தது. தாமிரபரணியை காப்பாற் அறிக்கை தயார் செய்து கொடுத்த தாணுலிங்கம் குழுவினர் உடைந்தே போனார்கள்.
அதற்காக அரசு அமைத்த திட்டம் தான் என்ன?
( தொடர்ந்து பயணிப்போம்)


