தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக உள்ள மணிமுத்தாறு அணை, பாபநாசம் காரையார் அணை, சோ்வலாறு அணைகள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது பிசான பருவ சாகுபடிக்காக மேற்கண்ட அணைகளில் இருந்து 16.11.2023 முதல் 31.03.2024 வரை 137 நாட்கள் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்று மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பாபநாசம் காரையார் அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், மின்சார துறையினர், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்துவிடப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவிக்கையில், காரையார், சேர்வலார், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடி மற்றும் குடிநீர் இதர தேவைகளுக்காக நீர்இருப்பு, மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப முதலமைச்சர் உத்தரவின்படி திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த நதியுன்னி கால்வாய், கண்ணடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் என சுமார் 11 கால்வாய்கள் மூலமாக சுமார் 86,107 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகவும் பயன் அடைகின்றன. மேலும் மழையின் அளவு பொருத்தும் அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும், இந்த தண்ணீரானது அடுத்தாண்டு மார்ச் 31 -ந் தேதி வரை திறந்துவிடப்படும் என்றார்.
இதேபோல் தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளில் இருந்தும் பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர திறந்து வைக்கப்பட்டது.


