தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பெறப்பட்ட 335 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர், பாராட்டு சான்றிதழ்களையும், ஓட்டப்பிடாரம் வட்டம் கடலோர கிராம மகக்ளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகத்தால் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


